Monday, July 27, 2009

படைப்பும் வாசிப்பின் அரசியலும் - ஆயிஷாவை முன்வைத்துச் சில குறிப்புகள்


புத்தக வாசிப்பு என்பதை அறைக்குள் நிகழும் ஒரு பொழுது போக்குச் செயலாக நம்மில் பலரும் கருதுகின்றனர். ஒரு நல்ல வாசகனுக்குப் புத்தகம் ஒரு உயிருள்ள பொருள். நல்ல வாசிப்பில் புத்தகத்திற்கு ஊடாக எழுதியவனின் முகம் நிழலாடுவது இயல்பு. படைப்பிலக்கியங்களில் அத்துடன் வேறு பல முகங்கழும் தெரிகின்றன. இந்த உறவினைத் தராத புத்தகம் நல்ல புத்தகம் இல்லை. அல்லது வாசிப்பும் நல்ல வாசிப்பு இல்லை.
(தொ. பரமசிவன்)

இன்றைய சூழலில் படைப்பு, விமர்சனம் என்பன வாசநிலைப்பட்டதாக மாறியிருக்கின்றன. வாசிப்பு, எதிர் வாசிப்பு, கட்டுடைப்பு வாசிப்பு, மீள்வாசிப்பு, வச்சிப்பின் அரசியல் என்ற சொல்லாடல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம், வாசிப்பு இன்று முதன்மை பெற்றிருக்கிறது. இன்று பெரும்பாலும் படைப்புகள் வாசகநிலையில் இருந்தே புரிந்து கொள்ளப்படுகின்றன. படைப்பு, வாசிப்பு ஆகிய இரண்டின் பிணைப்பும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இலக்கியப் படைப்புக்குள் நுழைகின்ற எந்தவொரு வாசகனுக்கும் வாசிப்புப் பற்றிய புரிதல் அவசியமாக உள்ளது. இதனால் வாசிப்புப் பற்றிய புரிதலுக்குப் படைப்பும் படைப்புப் பற்றிய புரிதலுக்கு வாசிப்பும் அவசியமாக இருக்கின்றன.

ஒரு படப்புக்குள்ளே தன்னை நுழைத்துக் கொள்கிற 'வாசகமனம்' படைப்புப் பற்றிய புரிதல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஏனெனில், இலக்கியப் படைப்புகள் பன்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இப்பன்மைத் தன்மை உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் உண்டு. இத்தகைய படைப்புகளை வாசிக்கின்ற வாசகனும் ஓத்டைபடியான அல்லது நேர்கோட்டு வாசிப்பின் மூலம் புரிந்துகொள்ள முடியாது. அவன்/ அவள் வாசிப்பினையும் பன்மைத் தன்மை கொண்டதாகவே நிகழ்த்த வேண்டி உள்ளது. இத்தகைய வாசிப்பு முறையே இன்று சாத்தியமாகவும் உள்ள்ளது. இதனால் படைப்பைப் போன்று வாசிப்பும் பன்மைத் தன்மை கொண்டதாகவே அமைகிறது. இவ்வாறு வாசிப்பின் அனைத்துச் சாத்தியங்களையும் உள்ளடக்கியதே வாசிப்பின் அரசியல் ஆகும்.

ஒரு கலைப் படைப்பைப் புரிந்து கொள்கின்ற வாசகன் அக்களைப்படைப்பை பன்மைத்துவம் கொண்ட வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி முக்கியமானதாகும். கலைப் படைப்புகள் பெரும்பாலும் அகவயம் சார்ந்ததாகவே இருக்கின்றன. புறவயத்தன்மை கொண்ட ஏனைய அறிவுத்துறைகள் போன்று ஒரே முடிவினை முன்வைப்பது கடினம். கலைகள் சமூக விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது போல கலையின் உள்ளார்ந்த விதிகளுக்கும் உட்பட்டு இயங்குகின்றன. எந்தவொரு ஆக்கக் களையும் கலை அல்லாதவற்றில் இருந்து வேறுபடுவது இக்கை விதிகளின் மூலமே. இவற்றையே நாம் ஆக்கவியல் அம்சம் அல்லது அழகியல் என்று கூறுகின்றோம். ஆகையால்த்தான் ஒரு கலையை மதிப்பிடும் போது அதன் கலை விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி உள்ளது (எம். .நுஃமான், 1987:12). இதனால் ஒரு கலைப் படைப்பை வாசகன் அப்படைப்புக்குள் இருந்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு கலைப் படைப்பின் உள்ளார்ந்த இயங்கு விதிகளின் ஊடாகப் பயணிக்கின்ற ஒரு வாசக மனத்தாலேயே படைப்பு மனம் நோக்கி நகர முடியும். இல்லாவிடன் அப்படைப்பின் முழுஇக் நோக்கிய நகர்தலை நிகழ்த்த முடியாது இடையில் நின்றுவிட நேர்கிறது. எம். . நுஃமான் கூறுவது போல் 'கலைக் கோட்பாடு என்பது ஒன்றே. அதாவது கலைப்படைப்பின் உள்ளார்ந்த விதிகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதன் வெளிப்பாட்டு விதிகளே வேறுபடுகின்றன. இவையே படைப்பின் தனித் தன்மையையும் தீர்மானிக்கின்றன. இதனை உணராத விமர்சகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இவர்களால் தாம் சாராத கருத்துநிலைசார் படைப்புகளை விமர்சிக்க முடியாது. தமிழ் இலக்கிடப் பரப்பில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இதனால் படைப்பு, வாசிப்பின் வேதிமூலங்களைக் கண்டடைய வேண்டிய தேவை இன்று உணரப்படுகிறது.

"கலைப் படைப்பு என்ப்து ஒரு மன நிகழ்வு. அது குறியீட்டு மொழியினாலேயே கட்டமைக்கப்படுகிறது" என்பார் ஜெயமோகன். இலக்கியம் மொழியின் குறியீடுகள் வழியாக வாசக மனத்தைச் சென்றடைகிறது எனலாம். ஏனெனில் கலைப் படைப்புகள் ஏனைய அறியுத்துரைகள் போன்று புறவயம் சார்ந்த ஒன்று அல்ல. அவை அகவயம் சார்ந்தவையும் கூட. "பனுவல் குறித்த ஊகங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்பவனாகவும், மாற்றிக் கொள்பவனாகவும், சில நேரங்களில் வெளியே இருந்து பல கருத்துக்களை இடப்பெயர்ச்சி செய்து கொள்பவனாகவும் அல்லது மொத்தமாகக் கைவிடுபவர்களாகவும் வாசகர்கள் ஒரு பனுவலுக்குள் பல்வேறு நிலைகளில் இயங்குகின்றனர்"(பஞ்சாங்கம், 2003: 127). இதனால் குறியீட்டு மொழியினை விரித்துச் செல்லும் மனப்பக்குவமும் கட்ப்பனைத் திறனும் ஒரு வாசகனுக்குத் தேவை. இதற்குப் பயிற்சி மிக அவசியம்.

ஒரு பன்மைத்துவம் கொண்ட படைப்பு ஒரே நேரத்தில் பல அனுபவங்களையும் செய்திகளையும் தர முடியும். இன்றைய சூழ்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ ஏனைய அறியுத் துறைகளையும் உள்வாங்கிச் செல்ல வேண்டிய தேவை கலைப் படைப்புகளுக்கு உள்ளன. ஏனைய அறிவுத்துறைகளின் உள்வான்குகை என்பது அதன் அழகியலை ஊரு செய்யாத வண்ணம் அமைதல் வேண்டும் என்பது முகிஇயமான விடயம். இதனால் கலைப் படைப்புகளைத் தனியே அகவயம் சார்ந்த ஒன்றாக அடையாளப்படுத்த முடியாத சூழல் உள்ளது. அவை புறவயம் சார்ந்தும் இயங்க வேண்டி உள்ளது. இதனாலேயே மு. தளையசிங்கம் போன்றோர் 'கலை கலைக்கானது' என்ற வாதத்தையும் 'கலை பொருளை முதன்மைப் படுத்தியது' என்ற வாதத்தையும் நிராகரித்தனர். சிலவேளை படைப்புகள் சிலவற்றை ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்வது என்பதும் சாத்தியம் அறறதாக இருக்கின்றன. எனவே ஒரு கலைப்படைப்பின் உள்ளார்ந்த இயங்கு விதிகளைப் புரிந்து கொள்கின்ற மனப் பக்குவமும் புறநிலைநின்ற பார்வையும் ஒரு வாசகனுக்கு அவசியம் எனலாம்.

I
இத்தகைய வாசிப்புப் பின்புலத்தில் இருந்து கொண்டே இரா. நடராஜனின் 'ஆயிஷா' என்ற படைப்பினைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆயிஷா என்ற படிப்பினை வாசித்த பலரும் தமது மனப் பதிவுகளைப் பல கோணங்களில் பதியு செய்துள்ளனர். அத்தகைய சில வாசிப்புக் கோலங்களை இங்கு பார்ப்போம்.

வாசிப்பு - 2
குழந்தைகளின் இயல்பான படைப்புத்திறன், விமர்சன மனப்பான்மை, அறிவியல்க் கண்ணோட்டம் எப்படி நம் பள்ளிகளில் மழுங்கடிக்கப்பட்டு அவர்கள் மந்தையாக்கப் படுகிறார்கள், அதிலிருந்து விலகித் தனித்துவமான விஞ்ஞானியாக வளர்வது எவ்வளவு கடினம் என்றெல்லாம் சித்திரிப்பதோடு, தமிழில் அறிவியல்ப் புத்தகங்கள், குழந்தைகளின் வழக்கமான வாழ்வை ஒட்டிய வினாக்கழுக்கு எளிதான விடைதரும் புத்தகங்கள் இல்லாத சூழ்நிலையையும் சுட்டிக் காட்டுகிறார், நடராஜன்.அத்தோடு படுதாவில் இருக்கும் இஸ்லாமியப் பெண்களின் குடும்பத்தில் வளரும் பெண் குழந்தை ஆயிஷாவின் பார்வை அம்மாதிரி எத்தனையோ பெண்களின் வளர்ச்சியில், காட்டப்படாத அக்கறையை நினையூட்டுகிறது.
(இராமானுஜம்: நூல் முன்னுரை)
வாசிப்பு - 2
இக்குறுநாவலை மூன்று காரணங்களால் எல்லோரும் (குறிப்பாக எழுத்தாளர்கள்) படித்தாக வேண்டும்.
1. யதார்த்த இலக்கியம் செத்துப்போச்சு என்பவர்களுக்கு இது பதில். அதே சமயம் யதார்த்தம் என்பது சில சம்பவப்பதிவுகள் மட்டுமே என இயந்திர கதியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. சமூகத்தில் சில போக்குகளை விமர்சனக் கண்ணோட்டத்தை படைப்பிலக்கிய யுக்தியோடு சொல்வதும் யதார்த்த இலக்கியமே. இக்குறுநாவல் அதற்கொரு உதாரணம.;
2. வடிவங்கள், யுக்திகள் மிகமுக்கியம். இந்த குறுநாவலை ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை எழுதுவதாக அமைத்திருப்பதால் ஆசிரியருக்கு விமர்சனச் சாட்டையைக் கொடுக்க விரிவான தளம் கிடைத்தது. இதுபோல் கற்பனையோடு புதிய வடிவங்களைத் தேட இக்குறுநாவல் தூண்டுகிறது.
3. இயந்திரமாகிப் போன ஆசிரியர்கள், பலியாடாகிப்போன மாணவர்கள், தமிழில் புத்தகங்கள் இல்லாமை, எழுத ஆசிரியர்கள் முயற்சிக்காமை, பெண்களின சோகம் இப்படிக் கனமான செய்திகளை பிரச்சார நெடியின்றி உறுத்தல் இன்றி மௌ;மையான நெஞ்சோடு பேசச் செய்ய முடியும் என்பதை இக்குறுநாவல் செய்து காட்டி இருக்கிறது.
(சு.பொ.அகத்தியலிங்கம், சென்னை)
வாசிப்பு – 3
நடராசனின் குறுநாவல் மனதை ஏதோ செய்தது
(தமிழ்ப்பரிதி, நெல்லிக்குளம்)
வாசிப்பு – 4
ஆயிஷா சிறுகதை அறிவியல் பொக்கிஷம்
(எஸ்.மு.நாஸர, வத்தலகுண்டு)
வாசிப்பு – 5
இந்நாவல் ஓர் உண்மைச் சம்பவம் போலிருக்கிறது. ஆசிரியர் கூறியபடி சுமார் ஆறு பெண்கள் இந்நாவலைப் படிக்கும்படி செய்துவிட்டேன். அவர்கள் இது உண்மையில் நடந்த கதையா என்று கேட்குமளவிற்கு சிறப்பாக இமைந்திருந்தது. மிகவும் பாராட்டுக்குரியவர் ஆசியர் அவர்கள்தான்.”
(முத்து எத்திராசன்)
வாசிப்பு -6
இரா. நடராஜனின் இக்குறுநாவல் கதைப்பொருளிலும் வடிவத்திலும் புதுமையாக விளங்குகிறது. கதைபடிக்கும் வாசகர் இதனை ஓர் இலக்கிப் படைப்பாக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவர். இக்குறுநாவலுக்கு அதன் ஆசிரியர் இரா.நடராஜன் ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற குறிப்பை அடைப்புக்குறிக்குள் தந்துள்ளார். ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை வடிவிலே இக்குறுநாவலின் வடிவம் அமைந்துள்ளது.”
(கலாநிதி துரை. மனோகரன், இலங்கை)

இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகிற போது, இதில் முக்கியமாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஒன்று, எல்லோரும் கதைப்பொருளிலும் வடிவத்திலும் புதுமையாக விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டு, இதனை சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற புனைகதையின் வடிவத்துள் ஏதோ ஒரு வகையாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்குரிய பிரக்ஞையை ஒருவரும் முன்வைக்கவில்லை. இத்தகைய வாசிப்பு முறையில் இருந்து விடுபட்டு ஆயிஷா என்ற படைப்பினை எத்தகைய வகைமைக்குள் அடக்குவது சாத்தியம், அதில் உள்ள பிரச்சினைகள் என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

II
ஒரு இலக்கியப்படைப்பின் பல தளப்பொருண்மை பற்றிய விவாதங்கள் முனைப்புப் பெற்றுள்ளன. கூடுதலாக அமைப்பியல் மற்றும் பின்அமைப்பியல் வாதிகளின்படைப்பாளியின் மரணம்பற்றிய கருத்தாடல்களின் பின்னர் இத்தகைய முறைமை மேலும் முனைப்புப் பெற்றுள்ளது. ஆனால் முற்றாக ஆசிரியனை நீக்கிவிட்டு படைப்பு செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பலதளப் பொருண்மையின் தோற்றம் பற்றிய விவாதங்களை எம்.. நுஃமான் போன்றோர் முன்வைத்துள்ளனர். ஆனால் மறுவாசிப்பின் தேவையும் முக்கியத்துவமும் இன்று அனைவராலும் உணரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இரா.நடராஜனின் ஆயிஷா என்ற படைப்பினை ஒரு தடவையில் வாசிக்கின்ற சாதாரண வாசகனுக்கு ஆயிஷா என்ற குழந்தைக்கு நேருகின்ற கொடுமைகளைச் சித்திரிக்கின்ற ஒரு படைப்பாகவே தோன்றும். அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்ற போதே அதன் சமூக யதார்த்தத் தளத்ததையும் பொதுமைத்தையும்; மேலும் விரித்துச் செல்ல முடியும்.

படைப்புகளில் உள்ளடக்கத்தில் மாத்திரம் பன்மைத்துவம் இருப்பதில்லை. அதன் வடிவத்திலும் இருக்கிறது. இன்றைய சூழலில் ஓர் இலக்கிய வகைக்குரிய தனித்துவமான வடிவம் ஒன்றினை வரையறை செய்வதென்பதும் கடினம். இன்றைய படைப்புகள் பல உரைநடையின் அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்துகின்றன. உரைநடை என்னென்ன தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றதோ, அத்தேவைக்கேற்ப எவ்வாறு வடிவமாற்றங்களைப் பெறுகின்றதோ, அவ்வடிவ மாற்றங்களைச் சிறுகதையாசிரியர்கள் கதை சொல்லுவதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்(செ.சுதர்கன் 2008: 49). என்று கூறுவது ஏனைய வடிவங்களுக்கும் பொருந்தும். நடராஜன் ஒரு நூலுக்கான முன்னுரை வடிவிலே தனது படைப்பபைத் தந்திருப்பது அதன் வடிவத் தனித்தன்மையைக் காட்டுகிறது.

இதனால்தான் இன்றுஎடுத்துரைத்தல்என்ற விடயம் முதன்மைப் படுத்தப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் ஒன்றினை வார்த்தைக் கோர்ப்புகளால் எடுத்துரைத்து புனைவின் மொழிக்குள் கொண்டுவரும் செயற்பாட்டினை எடுத்தரைத்தல் என்று, ஓரளவு எளிமையாக வரையறை செய்து கொள்ளலாம். சிலவேளை சாதாரண புனைகதை அல்லாதவற்றுள் கூட புனைவின் மொழி இருக்கும். அதேவேளை புனைகதைகளில் அத்தகைய தன்மையைக் காணமுடியாது. காரணம் எடுத்துபை;பில உள்ள சிக்கல்கள்தான.; சாதாரண விடயங்களை புனைவின் நெகிழ்வுத் தன்மையோடு புனைகதையாக அல்லது இலக்கியமாக மாற்றுவது எடுத்துரைப்பின் செயற்பாடுகளில் ஒன்று. எடுத்துரைப்பில் உள்ள மொழிக் கையாள்கையின் தன்மைகளே புனைவு மொழியின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. ஆயிஷாவில் சாதாரணமான ஒரு நூலுக்கான முன்னுரை வடிவத்தை புனைவின் தருக்கத்துக்குள் கொண்டு வந்கிருக்கிறார், ஆசிரியர்.

ஓர் இலக்கியப் படைப்பின் கருத்தியல் தளம், வடிவம் என்பன பல்வேறு கோடுகளை நோக்கி நகர்வது போல அதனை எந்த வகைமைக்குள் அடக்குவது என்ற பிரச்சினையும் சில படைப்புகளுக்கு ஏற்படுவதுண்டு. ஏனெனில,; எந்தவொரு படைப்பாளியும் இதை இந்த வடிவத்துக்குள்த்தான் எழுதப் போகிறேன் என்ற பிரக்ஞையோடு எழுத உக்காருவதில்லை. படைப்பு மனத்தின் கொதிநிலையே அதன் வெளிப்பாட்டு முறைமையைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, புதுமைப்பித்தன் தனது கதைகளின் பிறப்புப் பற்றிப் பின்வருமாறு கூறுவதில் இருந்து இதனை விளங்கிக்கொள்ள முடியும்.

நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. இதை நான் ஸ்பட்ஷமாகச் சொல்ல வேண்டியதில்லை; நான் விபரித்த உதாரணங்களே போதும். என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும், வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாக எப்பொழுதும் பல இருந்து கொண்டே இருக்கும் அக்கதைகளில் இருந்து கொண்டுதான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இதனை விபரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் வைத்திருப்பார்கள். நான் அப்படியல்ல ஞாபகமறதிக்கு எளிய வசதியளிப்பேன். அதையும் தப்பி வந்தவையேபுதுமைப்பித்தன் கதைகள்என்ற கோவையும் பிறவும்”(புதுமைப்பித்தன் 2002 : 45 )
ஓர் இலக்கியப்படைப்பின் அளவினை வைத்துக்கொண்டு அதனை சிறுகதை, குறுநாவல், நாவல் என்று வகைப்படுத்துவது கடினம். புதுமைப்பித்தனின் துன்பக்கேணியில் இருந்து பல சிறந்த உதாரணங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் உண்டு. ஆயிஷா என்ற படைப்பினை வாசிப்புக்கு உட்படுத்தியர்கள் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற வடிவங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளர். ஆனால் அதன் பிரக்ஞை பற்றி விவாதிக்கவில்லை என்று மேலே பார்த்தோம். இதனை நாவல் என்று குறிப்பிடுவது பொருத்தமில்லை. அது நாவல் தருகின்ற வாழ்க்கையின் தரிசனத்தைத் தரவில்லை. ஆனால் சிறுகதை, குறுநாவல் இரண்டுக்குமுரிய சாத்தியங்களைக் கொண்டிருப்பதனைக் காணமுடிகிறது. இதனால் இதை வாசிக்கின்ற வாசகனுக்கு சிறுகதை என்பதா, குறுநாவல் என்பதா அல்லது அவை இரண்டுக்கும் இடைப்பட்ட இன்னொரு வடிவத்ததைக் கண்டடைவதா என்ற பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய பிரச்சினையை வாசிப்பின் மூலமாகவே தீர்க்க முடியும். ஏனெனில், இலக்கியத்தை வரைவிலக்கணப்படுக்குவது என்பது கடினமான விடயமாகும். பொதுவாக வாசிப்பின் மௌனமும் இடைவெளிகளுமே அதனைத் தீர்மானிக்கின்றன.

ஆயிஷா படைப்பினை சிறிய நேரத்துக்குள் வாசிக்க முடிகிறது. அதனால் அதனைச் சிறுகதை என்று கருதலாம். இதே போல குறுநாவலிலும் சிறுகதையைப் போல ஒரு துளியில் பிரதிபலிக்கும் காலமே வருகிறது. எனவே, எந்தக் குறுநாவலிலும் காலம் பிரவாகமாகத் தென்படுவதில்லை, நகர்வாகவே காட்சி தருகிறது (ஜெயமோகன்1994 : 57). ஆனால், சிறுகதையைப் போன்று ஒற்றைப்படையான நகர்வை ஆயிஷாவில் காணமுடியவில்லை. ஒரு புளியமரத்ததை மையப்படுத்தி சமூக அசைவியக்கங்களைச் சித்திரிக்கின்ற சுந்தரராமசாமியின்ஒரு புளியமரத்தின் கதைஎன்ற நாவலைப் போல ஆயிஷா படைப்பும், ‘ஆயிஷாஎன்ற குழந்தையை மையப்படத்திய நகர்வாக சமூக யதார்த்தப் பிரச்சினையின் பல முகங்களை எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆயிஷா படைப்பின் முடிவை வைத்துக் கொண்டு அதனை சிறுகதை என்று ஒருவர் வாதிட முடியும். காரணம் அதன் முடிவு சிறுகதையின் முடிவை அண்மித்ததாகவே உள்ளது. அதன் முடிவு,
மிஸ்கரோலின் ஏர்சல் போலவோ, மேரிகியூரி போலவோ நம்ம நாட்டில
பெயர் சொல்கிறா மாதிரி ஒரு பெண்கூட விஞ்ஞானியா வரமுடியலையே
ஏன்?’
இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தனது
சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள்
அதைத் தேடட்டும்.

என்று முடிகிறது. ஒரு சிறுகதையின் முடிவானது அதன் புள்ளியிலிருந்து வாசகமனத்தை விரிவடையச் செய்வது போல இதனுடைய முடிவும் அமைந்திருக்கிறது. ஏனெனில், சிறுகதையின் மௌனம் அதன் முடிவுக்குப் பிறகு இருக்கிறது. சிறுகதையின் முடிவு ஒரு மறு தொடக்கம். அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தச் செய்கிறது அது. மேலும் அதுவரை கூறப்பட்ட அனைத்தையும் பலநூறு புதுத்தளங்களுடன் நுட்பமாகப் பிணைத்து விடுகிறது. நவீன இலக்கியப் படைப்புகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்று அனைத்து இலக்கிய வடிவங்களுக்குள்ளும் கவிதையைத் தொடமுயல்வது. நவீன சிறுகதை தன் வரிகள், சொற்களுக்கு இடையேயும் மௌனத்தைக் கொண்டுள்ளது. நாவலின் மௌனம் அதன் இடைவெளிகளிலேயே இருக்க முடியும்(ஜெயமோகன் 1994:06). ஆனால், ஒரு சிறந்த குறுநாவலுக்குரிய முடிவும் வாசக மனதை விரிவடையச் செய்யும். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக நாம் ஆயிஷாவின் முடிவினையும்; கொள்ள முடியும்.

கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற வடிவங்களில், சிறுகதைக்கு அடுத்தபடியாகச் சொற்களுக்குள் மௌன இடைவெளிகளைக் கொண்டதாக விளங்குவது குறுநாவலாகும். அந்த வகையிலே பார்க்கிற போது, ஆயிஷா படைப்பில் மௌனம் குறைந்து இடைவெளிகளே அதிகமாக இருக்கின்றன. சில இடங்களில் நாவலைப் போன்று இடைவெளி அதிகமாக இருக்கிறது. நல்ல குறுநாவல் சொற்களுக்கிடையே மௌனத்தையும் இடைவெளிகளையும் கொண்டிருக்கும். இத்தகைய சிறந்த குறுநாவல்கள் தமிழில் குறைவாகவே உள்ளன. இரா. நடராஜனின் ஆயிஷாவில் சில இடங்களில் மௌனம் இருக்கிற போதும் இடைவெளிகளே அதிகமாக உள்ளன. இவ்வாறு பார்க்கிற போது இதனைச் சிறுகதையாகக் கொள்வதைவிட குறுநாவலாகவே கொள்ளவதே சாத்தியமாக உள்ளது. ஏனெனில் ஒருவகையில் சிறுகதை நாவல் இரண்டின் செல்வாக்கும் கொண்டதாகவே குறுநாவல் அமையப் பெறுகிறது. சிறுகதையின் சாத்தியங்களை அதிமாகக் கொண்டிருக்கும் போது, அக்குறுநாவல் உச்சத்தை அடைகிறது.

இப்படைப்பினை வாசிப்புக்கு உட்படுத்தும் சிலர் அதனை சிறுகதை என்றும் வாதிட முடியும். அதற்கான பல கூறுகளும் அதில் இருக்கின்றன. மு. தளையசிங்கம் போன்றோர் கூறுவது போல இலக்கியப் படைப்பு என்பது உள்ளடக்கத்தில் மடடுமல்ல வடிவத்திலும் விடுதலை அடைய வேண்டும். அதேசேளை வாசிப்பு என்பதே தவறான வாசிப்பு என்பதன் மூலம் கட்டமைத்துக் கொள்கின்ற செயற்பாடுதான் (பஞ்சாங்கம் 2003:10) என்ற குரலும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இலக்கியப் படைப்பின் எல்லாப் பொதுமைகளையும் சிதைவாக்கம் செய்ய முடியாது. அது தரும் அனுபவம் அல்லது தரிசனம் என்பது இருந்து கொண்டே இருக்கும்.

ஒரு இலக்கியப் படைப்பு ஒரே நேரத்தில் இரண்டு வகைக்குரிய சாத்தியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரண்டுமாக இருக்க முடியாது. இதன் காரணமாக சில படைப்புகளை அது தரும் அனுபவம் அல்லது தரிசனத்திக் ஊடாகவே அதன் வகைமையினைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. சிலவேளை இரண்டுக்கும் இடையிலான இன்னோர் புதிய வடிவம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. அத்தகைய வாசிப்புக்கு இன்றைய படைப்புகள் பல இடந்தருகின்றன. இத்தகைய வாசிப்பினை அயிஷா படைப்பு மீதும் மேற்கொள்ள முடியும். ஆனால், அது என்ன வடிவம் என்று பெயர் சூட்டுவதிலும் சிக்கல்கள் உண்டு.

இப்போதைக்கு இரண்டு வடிவங்களுள் எதற்குரிய சாத்தியங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறதோ அந்த வடிவமாக அதனை வரையறை செய்யலாம். மேலே குறிப்பிட்டவற்றைத் தொகுத்து நோக்கும் போது, குறுநாவலுக்குரிய சாத்தியங்களையே அதிகமாகக் கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக, ஆயிஷா படைப்பின் நகர்வு, அதன் சொல்லாளளடல் முறைமை என்பனவும் குறுநாவலுக்குரிய சாத்தியங்களையே அதிகமாகக் கொண்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் இருந்து பார்க்கிற போது, இன்றைய படைப்புகள் பலவும் அதன் தர்க்கங்களை மீறக்கொண்டே இருக்கின்றன. பல படைப்பாளிகள் வித்தியாசமான கதையாடல் முறைமைகளைக் கையாள்கிறார்கள். பலர் வித்தியாசமாகக் கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே கதை எழுதுகிறார்கள். சிலருடைய கதைகளில் கதையே இருப்பதில்லை. சிலவேளை அவைகளில் வித்தியாகங்கள மட்டுமே எஞ்சியிருக்கும். வேறு ஒன்றையும் காணமுடியாது. அத்தகைய முறைமையில் இருந்து மாறுபட்டு, இரா.நடராஜனின்ஆயிஷா என்ற படைப்பு ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை வடிவிலே வித்தியாசமான கதைசொல்லல் முயைமையினையும், யதார்த்தமான சமூக அக்கறை கொண்ட கதையமைப்பினையும் கொண்டு விளங்குகிறது. எனவே, யதார்த்தமும் கலையழகும் மிக்க ஒரு குறுநாவலாக இதனைக் அடையாளப்படுத்த முடியும்.
(ஞானம் நூறாவது மலர்)

ஆனந்தமயிலின் படைப்புலகம் - ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய பக்கம்

(இக்கட்டுரை முழுமையாய் வலையேற்றம் செய்யப்படவில்லை )

“ உதாரணமாகச் சொல்லப் போனால் ரஞ்சகுமார், உமாவரதராஜன் போன்ற இப்போது முக்கியம் பெறுகின்ற எழுத்தாளர்கள் அலையிலிருநடதுதான் கவனத்தைப் பெற்றார்கள். அது தவிர குந்தவை, ஆனந்தமயில், ச.ராஜகோபாலன் போன்ற வித்தியாசமான எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள்.”1
( குப்பிளான் . சண்முகம்,2006: 15 )

அலை இதழில் அறிமுகமான முக்கியமான எழுதத்தாளர்கள் பற்றிய தனது கருத்தாடலை மூன்றாவது மனிதன் பதினேழாவது இதழுக்கான பேட்டியில் முன்வைத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகம் அவர்கள் மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது பலரையும் போன்று யார் இந்த ஆனந்தமயில் என்ற கேள்வி எனக்கும் இருந்தது. ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கும்வரை அவரது படைப்புகளை வாசிக்பும் வாய்ப்பக் கிட்டவில்லை. இத்ததைய நிலை பலருக்கும் இருந்திருக்கக் கூடு;ம். இத்தொகுப்பபை வாசத்து முடித்தபின் இவர் ஈழத்து இலக்கியப் பரப்பிவ் பலரது கவனத்ததையும் பெறுவார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆறு சிறுகதைகளையும், ஐந்து கவிதைகளையும் கொண்டு எண்பதுகளின பிற்பகுதியில் வெளிவர இருந்த இவரது தொகுப்பு இப்போது பன்னிரண்டு சிறுகதைகளை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அப்போது வெளியிடத் தீர்மானிக்கப்பட்ட படைப்புகயை முன்வைத்து முருகையனால் எழுதப்பட்ட முன்னுரையோடும், குப்பளான் ஐ.சண்முகத்தின் எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தோடும் வெளிவந்திருக்கும் இந்நூலைத் தொகுத்திருக்கிறார் இவரது மகன் நித்திலவர்ணன். ஆத்தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் எழுபதகளின் பிற்கூற்றிலிருந்து தொண்ணூறுகளின் பிற்கூற்றுவரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை.

தமிழ் இலக்கியப் பரப்பில் சில சிறந்த படைப்பாளிகள் பலகாலம் அறியப்படாமல் காலம் தாழ்த்தியே அறியப்பட்டார்கள், அறியப்படுகிறார்கள். இதற்கு அவர்களது படைப்பக்கள் தொகுதிகளாக வெளிவராமையும் ஒரு காரணமாகும். எழுபதுகளில் எழத ஆரம்பித்துப் பல கலைத்துவமான சிறுகதைகளைத் தந்த எஸ்.எல்.எம்.ஹனிபா தொண்ணூறுகளில் வெனிவந்த அவரது 'மக்கத்தச் சால்வை' என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடாகவே பலரத கவனத்ததையும் பெற்றார். அதே போன்று ஆனற்தமயிலும் இப்போது வெளிவற்திருக்கும் அவரது 'ஓர் எழுதுவினைஞனின் டயறி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பின் மூலம் பலரது கவனத்ததையும் பெறத் தொடங்குகிறார் என்று சொல்லலாம்.

இப்பின்புலத்தில் பார்க்கிற போது, இழத்துச் சிறுகதை வரலாற்றில் அருக்கான இடம் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றிய நூலினைத் தந்த கலாநிதி க.குணராசா2 (செங்கை ஆழியான்) 60-70 வரையான காலப்பகுதியில் எழுதிய சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய பட்டியலில் ஆனந்தமயிலின் பெயரையும் 'ஒற்றைக்காலக் கோழி என்ற சிறுகதையையும் தந்திருக்கிறார். அதற்குப்பின் அவருக்கு இடமில்லை. இதைவிட வேறு குறிப்புகள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பற்றியும், ஈழத்து இலக்கிய வரலாறு பற்றியும் எழுதியோரின் குறிப்புகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இதன் தொடர்ச்சியாக ஆனந்தமயிலின் படைப்புலகம் எத்தகையது, இதனை எவ்வாறு வினங்கிக் கொள்வது, ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அவர் பெறும் இடம் என்ன அல்லது அவருக்கான இடம் வழங்கப்பட்டுள்ளதா, அப்படியாயின் அதனை எவ்வாறு வரையறை செய்வது, அதில் உள்ள சிக்கல்கள் என்ன? போன்ற வினாக்கள் எழுந்த கொண்டே இருக்கின்றன. இன்றைய வாசகனுக்கு எழும் இத்தகைய கேள்விகள் தவிர்க்க முடியாதவையாகும். இத்தகைய வினாக்கள் கிளர்த்தும் சிந்தனையோட்டத்தின் வழியே ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ஆனந்தமயிலின் படைப்புலகத்தை விளங்கிக் கொள்ள முற்படுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

I
சில படைப்பானிகள் அதிகமாக எழுதுவதில்லை. ஆனால் அவர்களது படைப்புகள் அதிக மனவதிர்வகளை ஏற்படுத்தவதாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் படைப்பமன உந்துதலின் போதே தமது படைப்புகளை வெளிக் கொணர்கிறார்கள். அடியாழத்திலிருந்த படைப்புமன உந்துதலால் எழுதுகின்ற படைப்பாளியாகவே ஆனந்தமயில் நமக்குத் தோன்றுகிறார். கலைப்படைப்பு என்பத அறிவு, மனம் ஆகியவற்றின் வினையாற்றலால் கட்டமைக்கப்படுகின்ற வாழக்கையின் அனுபவ வெளிப்பாடாக வருவது. அதனால் அதனைத் தனியே எதார்த்தப் பிரதிபலிப்பாக அடையாளப்படுத்த முடியாது. அதைவிடவும் விரிவானது.அது சமூக அனுபவங்களைக் கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, அவை கிளர்த்தும் உணர் கொதிநிலைகளில் பிறப்பது. இத்தகைய படைப்புகள் சமூக அழகியற்தளம் கொண்டவை. பெரும்பாலும் ஆனந்தமயிலின் படைப்புகள் இத்தகைய தளத்தியே எழுகின்றன.

ஆனந்தமயிலின் படைப்புலகம் மிகவும் சிறியது. ஆனால், ஆழமும் நுட்பமும் நிறைந்தது. இவரது பெரும்பாலான படைப்புகள் புறவுலம் சார்ந்தவை அல்ல. பெரும்பாலும் இவை மென்மையான அகவுணர்வுகளையே கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றன. அத்தோடு சமூக யதார்த்தமும் கலைப்பாதிப்பும் மிக்கவை. கறாரான சமூகப் பிரச்சினைகளைப் பேசும் போது கூட, அவை பிரசாரம் செய்யவில்லை. முற்போக்குச் சிந்தனையை வெளிக்கொணரும் ‘திருவிழா’ என்ற கதையைப் படிப்போருக்கு, அதன் சமூக அழகியற் தளம் புலப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இவரது கதைகளில் இயங்கும் மென்மையான உணர்வின் உயிரோட்டமும், அதனை மொழிப்படுத்தும் விதமும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன.

இலக்கியம் ஒரு மொழிக்கலை. அது முழுக்க முழுக்க மொழியைச் சார்ந்தே இயங்குகிறது. அதன் வெற்றியும் மொழிக் கையாழ்கையில்தான் தங்கியிருக்கிறது. ஆனந்தமயிலின் பலம் மென்மையான உணர்வுகளை மொழிப்படுத்;துகின்ற முறையில்தான் இருக்கிறது. இவரது கதைகளில் ‘ஒற்றைக்கால் கோழி’, ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’, ‘காக்காச்சி கரிமகளே’, ‘திருவிழா’, ‘நண்பனும் ஒரு புளியமரமும்’, ‘விதி’, ‘விளக்கீடு’ போன்ற கதைகள் சிறந்த படைப்புகள் என்பது என் எண்ணம். ‘ஒற்றைக்கால் கோழி’, ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’, ‘காக்காச்சி கரிமகளே’, ‘நண்பனும் ஒரு புளியமரமும்’, ஆகிய கதைகள் வெளிப்பாட்டு முறையிலும், மொழி நடையிலும் தனித்துவமானவை.

ஓர் எழுத்தாளனின் மன உணர்வுகளை ஓர் ஒற்றைக்கால் கோழியை வைத்துக்கொண்டு கிண்டல் மிகுந்த நடையில் ‘ஒற்றைக்கால் கோழி’ என்ற கதையை நகர்தியிருக்கும் விதம் சிறப்பானது. அதே போன்று ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’ என்ற கதையை டயறிக் குறிப்புகள் ஊடாக நகர்த்தியிருக்கிறார். இக்கதையின் முடிவிலே தொகுப்பாசிரியர் “இச்சிறுகதையின் முடிவுப்பகுதி தவறிவிட்டது; வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்” என்ற குறிப்பைத் தந்திருக்கிறார். இக்கதையை வாசித்து முடித்தபின் அது முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. அதிலே வருகின்ற டயறிக் குறிப்புகளை எழுதியவர் அதற்கு மேல் எழுதாமல் விட்டிருக்கலாம்; அத்தோடு முடிகிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. சிறுகதையின் முடிவு என்பது கதையின் மறு தொடக்கம் என்பர். அது வாசக மனதில் எழுதாத பல பக்கங்களை எழுத வைக்கக்கூடியது. அத்தகைய ஆற்றல் இக்கதைக்கும் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

ஆனந்தமயில் மொழியைக் கையாழும் விதம் தனித்துவமானது. பெரும்பாலும் அவை ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாதவை. பல இடங்களில் இவரது மொழி கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது. உதாரணமாக, ‘ஓர் எழுதுவிளைஞனின் டயறி’ என்ற கதையில் வரும் பின்வரும் வரிகள் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

“எத்தனை மாலை நேரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
ஏன் தனிமையை நாடுகிறீர்களோ!
நான் இப்போதும் பேசவில்லை. மெல்லிய அழுகுரல் அது….
அது அவனுடையதுதான். யாருக்கானது – என்கானதா….
இதென்ன பிரிந்தா….!
பூப்போன்ற கைகளைப் பிடித்த போது அவள்
அதிசயித்திருக்க வேண்டும். சிறு நடக்கம்.
அவள் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
என்னை நானே விடுவித்த போது ஏக்கப் பெருமூச்சுத்தான் எழுந்தது.”3

இதை அடுத்து எமக்கு ஏற்படும் பிரச்சினை என்னவெனில் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ஆனந்தமயிலுக்குரிய இடம் என்ன அல்லது அதை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதே. இக் கேள்வி மிகவும் சவால் மிகுந்த ஒன்றாகும். ஏனெனில் இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, இவரது தொகுதி கிடைக்கையில் மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டோம். இதற்குள் ஈழத்துச் சிறுகதை பல புதிய தளமாறுதல்களைப் பெற்றுவிட்டது. இதனால் இவரது கதைகளை அக்காலகட்டத்தில் வைத்து நோக்குவதே பொருத்தமானது. அத்தோடு எல்லா காலத்தையும் கடந்து எம்மை வசீகரிக்கும் செய்யும் ஆற்றல் இலக்கியத்திற்கு உண்டு. எக்காலத்திற்கும் பொருத்தமான அழகியல் இலக்கியத்தில் இருக்கவே செய்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் சங்க இலக்கியம் எம்மைக் கவரவில்லையா? இத்தொகுப்பு முன்னுரையில் முருகையன் அவர்கள் கூறும் பின்வரும் கருத்து இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக இருக்கும்.

“இலக்கியத்தரம், இலக்கியத்திறன் எனப்படும் சில பெறுமதி வாய்ந்த விழுமியங்கள் இல்லையா? ஏன் இல்லை. நிச்சயமாக உண்டு. …. …. அதுதான் இலக்கியக் கலையின் இரகசியம். ஆரவாரமான சலசலப்பையும் பரபரப்பையும் கடந்த அடியாழத்தில் உள்ளோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உன்னதமான உயிரியக்கம்; நிதானமான அமைதியும் கருத்தூன்றிய கலைத்திறன் செறிந்த உழைப்பும் தோற்றுவிக்கும் பரிசு; அது வாசக உலகம் முழுவதற்குமான பரிசு.”4

ஆனந்தமயில் எழுபதகளின் பிற்கூற்றிலிருந்து எழுதத் தொடங்குகிறார.; ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இது முக்கிய காலகட்டமாகும். ஏனெனில் எழுபதுகழுக்குப்பின் ஈழத்துச் சிறுகதையில் சில புதிய போக்குகள் உருவாகத் தொடங்கின. இதற்கு முன் குறிப்பாக அறுபதுகளில் இலக்கியத்தில் உள்ளடக்கமே முதன்மைப் படுத்தப்பட்டது.5 ஆனால் எழுபதுகளின் பின் அல்லது எண்பதுகளிலிருந்து. உள்ளடக்கம், அதன் வெளிப்பாட்டு முறை என்பவற்றுக்கு முதன்மை கொடுத்து கலைத்துவம் மிக்க படைப்புகள் வெளிவரத் தொடங்கின.6 இக்காலகட்டத்தில் எழுத ஆரம்பித்த உமா வரதராஜனின் ‘உள்மன யாத்திரை’ என்ற சிறுகதைத் தொகுப்பின் அறிமுக உரையில் எம்.ஏ. நுஃமான் குறிப்பிடும் பின்வரும் கருத்து இவ்விடத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

“ இக்கதைகளைப் பொறுத்தவரை இத்தகைய எதிர் கொள்ளல் மிகவும் இயல்பானதாகவும் கலைத்தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருந்த போதிலும் நமது பாரம்பரிய முற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் கலை இலக்கியத்தில் இத்தகைய மனோபாவத்தை தீவிரமாக எதிர்ப்பார்கள். இதைப் பிற்போக்குத் தனிமனிதக் கலை என்றும் சாடுவர். அவர்களைப் பொறுத்தவரை கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் கலகக்குரல் எழுப்ப வேண்டும். முரண்பாடுகளை மோதி உடைக்க வேண்டும். அப்போததான் அது முற்போக்கு இலக்கியமாகும். இக்கண்ணோட்டம், ஒரு படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகளை விட, படைப்பாளியின் மபோவத்ததை – அல்லது நோக்கு நிலையை மட்டும் முதனமைப்படுத்துவதன் விளைவாகவே ஏற்படுகின்றது. ஆனால் ஒரு நுண் உணர்வு மிக்க வாசகனைப் பொறுத்தவரை படைப்பாளியின் மனோபாவத்ததைவிட படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகள் அல்லது சமூக யதாரத்தம், அது ஏற்படுத்தும் கலைப் பாதிப்பு என்பனவே முக்கியமானதாகும்.”7

இப்பின்புலத்திலே இருந்து நோக்குகிற போது, எழுபதுகளின் பிற்பகதியில் இருந்து எழுத ஆரம்பித்த ஆனந்தமயில் சில வித்தியாசமான படைப்புகளைத் தந்திருக்கிறார். பல கதைகள் வழமையான கதை எழுதல் முறையிலே எழுதப்பட்ட போதும் கலை நேர்த்தியுடன் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய படைப்புகளைத் தந்த ஆனந்தமயில் ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் பலரது கவனத்தையும் பெறுவார் என்று சொல்லலாம். இவர் எழுபதுகளின் பிற்பகுயில் இருந்து வித்தியாசமான வெளிப்பாட்டு முறையில் பல சிறுகதைகளைத் தந்த படைப்பாளிகளோடு வைத்து நோக்கப்பட வேண்டியவர். இத்தகைய கலைத்தாக்கம் இவரது சிறுகதைகளில் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அடிக்குறிப்புகள்
1. சண்முகம், குப்பிளான் ., (2006) நேர்காணல் - மூன்றாவது மனிதன்பதினேழாவது இதழ்). .15.
2. குணராசா,., (2001 ) ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, யாழ்ப்பாணம்; வரதர் வெளியீடு.ப.194.
3. ஆனந்தமயில்,., (2008) ஓர் எழுதுவியைஞனின் டயறி, வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு. .25.
4. ஆனந்தமயில்,., (2008) ஓர் எழுதுவியைஞனின் டயறி, வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு. முருகையன்,., (முன்னுரை) .xiv.
5. இக்காலகட்டத்தில் முற்போக்கு வட்டத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும்சிலர் கலைத்துவமான படைப்புகபைத் தந்தனர் என்பதும் கவனிக்க வேண்டியது.
6. இக்காலகட்டத்தில்தான் சில முற்போக்கு விமர்சகர்களும் இலக்கியத்தில்அழகியல் முக்கியத்தவம் பற்றிப் பேசத் தொடங்கினர் என்பதும்கவனத்திற்குரியது.
7. வரதராஜன்,உமா, (1988) உள்மனயாத்திரை. நுஃமான்,எம்.., (முன்னுரை)

உழைப்பு - சடங்கு - நிகழ்த்துகலை : காவடியின் கலைப்பயணம் பற்றிய ஒரு சமூகவியல் நோக்கு













மனிதனின்
நிகழ் கலைகள் அனைத்தையும் உழைப்புத் தன்மையோடு கவனிக்கத் தவறக்கூடாது. தன்மைகளே வகைப்பாடுகளுக்கும் வகையளிக்கின்றன.
-முனைவர் கே.. குணசேகரன்

கிராமிய
நிகழ்த்து கலை
வடிவங்களுக்கும் சடங்கியல் முறைமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் மக்களுடைய கிராமிய நிகழ்த்து கலை வடிவங்களான கரகம், கும்மி, காவடி போன்ற வடிவங்களும் இத்தகைய தன்மைகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. இன்று பெரும்பாலும் இவை சடங்கியல் முறைமை சார்ந்த வடிவங்களா, சடங்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு நிகழ்த்து கலை நோக்கிப் பயணிக்கின்ற இடைமாறுகட்ட வடிவங்களா, சடங்கிலிருந்து முற்றாக விடுபட்ட நிகழ்த்து கலை வடிவங்களா அல்லது ஒரேநேரத்தில் சடங்கு, நிகழ்த்துகலை என்ற இரண்டுக்குமான சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற வடிவங்களா என்று ஆராய்கின்ற முறைமையே காணப்படுகிறது. ஆனால், சடங்கியல் முறையின் தோற்றம், அதன் பற்றி ஆராய்வது குறைவு. இந்தப் பின்புலத்தில் பார்க்கிறபோது இன்று காவடி,
  1. முருகனுக்கு நேர்த்தி வைத்து, அது நிறைவேறிய பின் எடுக்கப்படுகின்ற சடங்கியல்சார் வடிவம்
  2. சடங்கியல் முறைமையிலிருந்து வளர்ச்சியுற்ற நிகழ்த்துகலை வடிவம்
என்ற இருதள நிலைகளில் ஆடப்படுகின்ற வடிவமாக இருக்கிறது. இவ்விருதளநிலைகளிலும் ஆடப்படுகின்ற காவடிகள் பல ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டு விளங்குகின்றன. சடங்கியல்சார் வடிவமாகவும் நிகழ்த்துகலைசார் வடிவமாகவும் இருக்கின்ற போது, அதன் தன்மைகள், சமூக அடிப்படைகள் என்ன என்பதும் இன்றைய சூழ்நிலையில் எந்த வகைமைக்குள் அதனை அடக்க முடியும் என்பதும் முக்கியமான வினாக்களாக உள்ளன. அத்தகைய கேள்விகளின் ஊடாக அதன் இன்றைய நிலையினையும் விளக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

I
இந்துக்கள் முருகக் கடவுளுக்கு ஏதாவது ஒரு காரியம் நிறைவேற காவடி எடுப்பதாக நேர்த்தி வைப்பார்கள். இவ்வாறு அக்காரியம் நிறை வேறியபின்னர் காவடி எடுக்கப்படுகின்ற சடங்கியல்சார் முறைமை இன்றுவரை காணப்படுகிறது. அவர்கள் காவடிக்குரிய தெய்வமாக முருகனையே கருதுகிறார்கள். இதற்குரிய காரணம் காவடியின் தோற்றம் பற்றி அறிகிற போது கிடைக்கும். காவடி என்பதுகாவுதடி முறையிலிருந்தே பிறந்ததாகும். ஆரம்பகாலங்களில் குன்றுகள்தோறும் வாழுகின்ற குமரனுக்கு காணிக்கைப் பொருட்களைக் கொண்டு சென்ற மக்கள், அதனை இலகுபடுத்த சில நடைமுறைகளைக் கையாண்டனர். இதற்காகத் தடி ஒன்றினை எடுத்து, அதன் இருமருங்கிலும் அக்காணிக்கைப் பொருட்களைக் கட்டிக்கொண்டு சென்றனர். இவ்வாறு நேர்த்தியினை நிறைவேற்றும் முறை தமிழ் நாட்டில் இன்றும்காணப்படுகிறது.1 இதனை இம்முறைமையின் எச்சமாகக் கருதமுடியும். இத்தகைய நடைமுறையே பின்னர் காவடியாக உருமாற்றம் பெற்றது.

காவடி என்ற சொல்லின் தோற்றமும் இதனடியாகவே தோற்றம் கண்டது. காவுதடி என்பது காவு(வினை), தடி(பெயர்) என்பவற்றின் கூட்டுப்பெயராகும். காவு என்பதற்கு மதுரைப்பேரகராதி ஓர் மந்திரிமை, சிறுதெய்வங்களுக்கு இடும்பலி, சுமஎன் ஏவல் என்ற பொருள்களைக் குறிப்பிடுகிறது. தடி என்பதற்கு க்ரியாவின்தற்காலத் தமிழ் அகராதி உருண்டையான கனமான கழி(தடி) என்ற பொருளைக் கூறுகிறது. கனமான தடி ஒன்றிலே காணிக்கைப் பொருட்களைக் காவிச்செல்வதன் காரணமாக இது காவுதடி என்று காரணப்பெயராக இடம்பெற்றிருக்கிறது. காவுதடி என்பதற்கு காத்தடி, காத்தண்டு, காக்கம்பு என்ற பொருளையும் காவடி என்பதற்கு கா, காவுதடி, காத்தடி, காமரம் என்ற பொருள்களையும் மதுரைப்பேரகராதி வழங்கியிருக்கிறது. இவற்றிலிருந்து பார்க்கிற போது காவடி என்ற சொல் காவுதடி என்ற சொல்லிருந்தே மருவி வந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

இதனைவிட காவடியின் தோற்றம் பற்றிய புராணச் செய்தி ஒன்றும் காணப்படுகிறது. ஒருசமயம் சிவபெருமான் அகத்தியரை தென்னாட்டுக்கு அனுப்பிய போது, அவர் பூசை செய்வதற்காக இரண்டு குன்றுகளைக் கொடுத்தனுப்பினாராம்; ஒரு குன்றைத் தமது ஸ்தானத்திலும் மற்றையதைத் தம் பத்தினியாகிய உமாதேவியின் ஸ்தானத்திலும் வைத்துத் தொழும்படி கூறினாராம். அந்த இரு குன்றுகளையும் எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி வரும்போது, ஒரு காட்டுப்பிரதேசத்தில் வைத்துவிட்டுத் தென்னாட்டுக்கு வந்துவிட்டார். மற்றொருமுறை அந்தக்குன்றுகளை எடுத்துவருவதற்காக வடக்கு நோக்கிப் புறப்பட்ட போது, அவரது மாணவர்களுள் ஒருவரான இடும்பன் "அவற்றை நான் எடுத்து வருகிறேன்என்று கூற, அகத்தியர் அவனை அனுப்பிவைத்தார். வடக்கிலிருக்கும் அக்குன்றுகள் இரண்டையும் இடும்பன் தூக்க முயன்று முடியாமற் திகைத்து நின்றான். அப்போது பிரதண்டம் (பிரம்மனதுதடி) மலைகளின் மீது காட்சியளித்தது. பாம்புகள் பல வந்து, தமது உடலால் குன்றுகளையும் பிரதண்டத்தையும் சேர்த்துக் கட்டின. இவை காவடி போன்றுமாறின. அப்புறம் இடும்பன் குன்றுகள் இரண்டையும் இலகுவாகத் தூக்கிவந்தான். பழனிக் காட்டுக்கு வந்து குன்றுக்காவடியை இறக்கி வைத்துவிட்டுச் சிறிது இளைப்பாறினான். பின்னர் தூக்க முயன்று முடியாமற் போய்விட்டது. இதன் காரணம் புரியாமல் மலையின் உச்சியைப் பார்த்த போது, கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு கௌபீனதாரியாகக் காட்சியளிக்கும் ஓர் இளைஞனை -தண்டாயுதபாணியை- க் கண்டான்.

இளைஞன்குன்றுகள் எனக்குரியவைஎன உரிமை கொண்டாடினான். இடும்பனுக்குக் கோபம் வந்து அவனோடு சண்டையிட்டான். இறுதியில் இடும்பன் மூர்ச்சித்து விழுந்தான். தெளிந்து எழுந்த பிறகு நிற்கும் சிறுவன் சுப்பிரமணியக் கடவுளே என்பதை அறிந்து . “தான் குன்றுகளைக் காவடியாகத் தூக்கி வந்தததைப் போல, முருகன் சந்நிதிக்குக் காவடி தூக்கி வருபவர்களுக்கும் அருள் செய்து, அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்க வேண்டும்என்று வரமும் வேண்டினான். முருகன் அவ்வாறே வரம் கொடுத்தார். அன்று முதல் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.2 இப்புராணச் செய்தியின் உண்மைத் தன்மை என்ற நிலைகளுக்கு அப்பால், காவடி பற்றிய சில செய்திகளை அறிய முடிகிறது.

  • காவடி முருகனோடு சம்பந்தப்படுத்தப்படல்.
  • காவடியில் இடும்பனின் வருகை. அதாவது, காவடி ஆடிச்செல்லும் போது இடும்பன்சாமி கூடவே ஆடிச் செல்கின்ற வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அதே போன்று பல முருகன் ஆலயங்களில் இடும்பன் பரிவாரத் தெய்வமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளமையைக் காண்கிறோம். இத்தகைய முறைமைக்கு இது வித்திட்டிருக்கலாம்.
  • காவடி தடி ஒன்றின் மேலே மலை போன்ற வடிவில் கட்டப்படுவதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம்.
இவை அனைத்தும் காவடியானது காவுதடி என்ற முறையில் இருந்தே பிறந்திருக்க வேண்டும் என்பதையே எமக்குப் புலப்படுத்துகின்றன. உண்மையில் தொன்மையான கூட்டு வாழ்க்கையில் இயற்கையுடன் நிதழ்த்தியபாவனைஅல்லதுபோலச்செய்தல்என்ற செயற்பாடும் நாளாந்த வாழ்க்கையில் இடம்பெற்ற இணக்கல் (Improvision) நடவடிக்ககைகளும், வாழ்க்கைத் தொழிற்பாடுகளின் போது மனவெழுச்சிப் பளிச்சீடுகளும் அரங்கின் தோற்றத்திற்குரிய அடிப்படைகளாயின. இந்தப் பன்முகப்பாடுகளை நோக்காது, ‘சடங்கிலிருந்து அரங்கு தோன்றியதுஎன்று வாய்ப்பாடாகக் கூறுதல் ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஆய்வாகிவிடும்.”3

இந்தப் பின்புலத்தில் பார்க்கிற போது, காவுதடியின் எச்சங்களை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகிறது. இதனைவிட ஆரம்பத்தில் சேவல், அன்னம், மச்சம்(மீன்) என்பவற்றைக் குடத்தில் இட்டு காவடி எடுக்கின்ற வழக்கம் இருந்தது. “முன்னர் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் பொரித்த மீன்களைச் சட்டியிலிட்டுக் காவடி எடுப்பதாகவும் கோவில் அருகிலுள்ள தொண்டைமானாற்றினருகாகச் செல்லும் போது, சட்டியிலுள்ள பொரித்த மீன்கள் உயிர் பெற்று ஆற்றில் விழுவதாகவும் ஐதிகம் உண்டு.”4 இத்தகைய முறையில்; மேன்நிலையாக்கம் காரணமாக பின்னாளில் மாமிசம் ஒதுக்கப்பட்டு, பண்டாரங்கள் ஊர் ஊராகச் சென்று அன்னப்பிச்சை எடுக்கின்ற அன்னக்காவடி முறையே பலகாலம் நீண்டது. இச்செய்தியை பாரதியின்

எண்ணும் முன்னேஅன்னக் காவடிப் பிச்சைஎன்
றேங்கிடுவான் குரலும்5

என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன. இதன்பின்னர் பாற்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, முள்ளுக்காவடி, துலாக்காவடி என்று காவடியின் வகைகள்நீண்டு செல்கின்றன. எனவே, காவடியானது காவுதடி முறை என்ற உழைப்பினடியாகவே பிறந்தது என்று கூறுவதே பொருந்தும். பின்னாட்களிலேயே புராணச் செய்திகள் உள்நுழைந்து கொண்டன.
II
அடுத்த தளத்தில் சமூக மேன்நிலையாக்கம் காரணமாக காவடிசெய்தல், பாடல், இசை, ஆடல் என்பவற்றைச் செய்வதற்கான சமூகக் குழுமங்கள் உருவாக்கம் பெறுகின்றன. இத்தகைய சமூகக் குழுமங்கள் இதனைத் தொழில் முறையாகச் செய்து வருவதையும் காணமுடிகிறது. இதன் காரணமாக இன்று காவடிக்களையானது ஒரு தொழில் முறைக் கலையாகவும் மாற்ற முற்று இருக்கிறது என்று சொல்லலாம்.

பெரும்பாலும் இன்று காவடியினைச் செய்வோர்களாகப்பண்டாரம்என்ற சமூகக் குழுமமே குறிப்பிடப்படுகிறனர். இவர்கள் ஆரம்பத்தில் சத்திரம், மடம் என்பவற்றில் வாழுகின்ற பண்டாரங்களுக்காக ஊர் ஊராகச் சென்று 'அன்னக்காவடி தர்மம் தாயேஎன்று அன்னக்காவடி எடுப்பவர்களாகவே இருந்தார்கள். பின்னர் ஜீவனோபாயத்தை ஓட்டுவதற்காக சிலர் நினைத்த போதெல்லாம் காவடி எடுக்கத் தொடங்கினர். அதனாலேயே ஒன்றும் இல்லாதோரைஅன்னக்காவடிஅல்லதுவெறுங்காவடிஎன்று அழைப்பதனை இன்றும் காண்கிறோம்.6 இத்தகைய சமூகப்பின்புலத் தாக்கம், சமூகமாற்றம் காரணமாக இவர்கள் தம்மைச் சமூக மேன்நிலையாக்கம் செய்கின்ற போது, அன்னக்காவடி முறையினைக் கைவிட்டு காவடியைச் செய்கின்ற தொழில் முறையைக் கையேற்றிருக்க வேண்டும்.

இவர்கள் காவடியைச் செய்கின்ற போது அதனை அழகுபடுத்த பட்டுத்துணி, மயிலிறகு என்பவற்றையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதற்குஅதிகமாக மயிலிறகினைப் பயன்படுத்துவதற்கான காரணம் பற்றிச் சிந்திக்கிறபோது,

  • இயல்பாக மயிலிறகு மீதான அழகுணர்ச்சி
  • குன்றுகளில் வாழும் முருகனுக்கு காவடி எடுக்கப்படுகிறது. மயில்மலையும் மலைசார்ந்த இடத்தில் அதிகமாக வாழ்வதால், அதனைஅங்கிருந்து இலகுவிற் பெறமுடியுமாக இருத்தல்
  • முருகனின் வாகனமாக மயில் இருத்தல்
போன்ற காரணங்களால் மயிலிறகினை விரும்பிப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறலாம். இன்று பல்வேறு வர்ணத்தாள்களையும் பயன்படுத்தி காவடிதயாரிப்பதனைக் காண்கிறோம். இதனைவிட இன்று தொழில்முறை வெவ் வேறு இதனைச் தயாரித்து வருவதையும் காணலாம்.

காவடிக்கலையில் பாடலும் முக்கியத்துவம் பெறுவதைக் காணமுடியும். பாடல்கள் நாட்டார் மெட்டில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன. காவடி உழைப்பினடியாகப் பிறந்தது போன்று பாடல் மரபும் உழைப்பினடியாகவே பிறந்திருக்கிறது. “முருக பக்தர்கள் யாத்திரை செல்லும் போது, பல்வேறு மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். அவர்கள் தனித் தனியாகச் செல்வதில்லை. காவுதடியில் பொருட்களையும் தமது ஒரு சில பாவனைப் பொருட்களையும் கட்டிக் கொண்டு செல்வர். வழிப்பயணம் தோன்றாமல் இருப்பதற்காக பாடிச்செல்வர். அவையே பின்னர் பல்வேறு பட்ட ராகவேறுபாடுகளுடன் கூடிய காவடிச் சிந்தாகு
ம்.7 காவடிச்சிந்து அதனைத் தொடர்ந்து வந்த பல்வேறு சிந்துகளிலும் இத்தன்மையைக் காணலாம். காவடிச்சிந்திலே வருகின்ற பின்வரும் பாடல் மூலம் இதனை அறியலாம்.

"ஆறுமுக வடிவேலவனே! கலி
யாணமும் செய்யவில்லை; சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்
கழைக்கிறாய், என்ன தொல்லை?
மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சுசும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில்
வெட்கம் எங்கே போச்சு "8

என்று தலைவியின் ஊடலாக அமைகின்ற இப்பாடல், கேள்வி பதில் முறையிலே அமைந்த நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதைக் காணலாம். காவடி எடுக்கும் போது பாடல்களை காவடி எடுப்பவரோடு செல்கின்றவர்களே பாடிச்சென்றனர். பின்னர் இவற்றை இசைத்துச் செல்லுகின்ற தொழில்முறைசார் சமூகக் குழுமம் உருப் பெற்றது.

இதில் இசையும் பிரதானமானது. இசைக்கருவிகளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றமுற்றே வந்திருக்கின்றன. முதலில் வாயாலே பாடிச்சென்ற இவர்கள் பின்னரே இசைக் கருவிகளைச் சேர்த்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் தோற்கருவிகளான உடுக்கு போன்ற கருவிகளே பயன்படுத்தப்பட்டு, பின்னர் பறை, மேளம், மேளத்தை ஒத்த தோற்கருவி என்பன பயன்படுத்தப்பட்டன. இன்று இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ அல்லது அனைத்தையுமோ இசைத்தவாறு காவடியை ஆடிச்செல்வர். இன்று இதற்கும் தொழில்முறைசார் தனிக்குழுமங்கள் காணப்படுகின்றன.

பாடல், இசை போன்று ஆடல் முறைமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டுப்புறக் கலைகளின் ஆடல் முறைகள் பெரும்பாலும் ஒத்தவையாகவே இருக்கும். கரகம், கும்மி, கோலாட்டம், காவடி என்பவற்றின் ஆடல்களில் காலை எடுத்து வைத்து ஆடுகின்ற முறைமைகளில் ஒற்றுமை உண்டு. காவடியின் மாற்றீடாக ஓரளவு கரகத்தைக் கொள்ள முடியும். ஆனால் காவடியில் செய்கின்ற சில விளையாட்டுகளை நாம் கரகத்திலே செய்ய முடியாது. உதாரணமாக, காவடியைத் தோளின்மேல் வைத்துக் கைகளைப் பிடிக்காமல்உடலை அசைப்பதன் மூலம் தோளிலிருந்து முதுகுக்கும் முதுகிலிருந்துதோளுக்குமாக மாற்றி மாற்றி ஆடுவார்கள். இதனைக் கரகத்தில் செய்யமுடியாது. ஆனால், கையைப்பிடிக்காமல் கரகம் ஆடுகின்ற முறைமை உள்ளது. “அவற்றுள் ஆட்டக்காவடியும் தாளக்காவடியும் நடனங்களை அடிப்படையாகக்கொண்டவை. கூத்துக்காவடி, தாளக்காவடி என்றும் அழைக்கப்படுகிறது. தாளக்கட்டுகளை அடிப்படையாக வைத்து ஆடுவதால் இது இப்பெயர் பெற்றிருக்கலாம். காவடியின் ஆட்டங்கள் காவடிச்சிந்து, மாரியம்மன் தாலாட்டு, காத்தவராயன் பாடல்களின் இசைக்கு ஏற்ப ஆடப்படும். உடுக்கு, பறை, மேளம்என்பன இவற்றின் பின்னணி வாத்தியங்களாகும். தாளக்காவடி நுட்பமான ஆட்டமுறைகளை உடையது.”9 இதனைப் பழக்குவதற்கு பெரும்பாலும் ஓர் அண்ணாவியார் இருப்பார். இது பெரிதும் தொழில்முறைசார்ந்தேகாணப்படுகிறது. இதனை நிகழ்த்த தனித்த சமூகக் குழுமங்கள்காணப்படுகின்றன.

இன்றைய நவீன யுகத்திலே காவடி எடுப்பது குறைந்து வருவதாலும் அதில் பலமாறுதல்கள் இடம்பெற்று வந்திருப்பதாலும் இக்குழுங்களுக்கான தொழில்வாய்ப்பு குறைந்து வருவதுடன் இக்கலை வடிவமும் நலிவடைந்து செல்வதும்நாம் வருந்தக் கூடிய விடயங்களாகும். உதாரணமாக, உழவு இயந்திர வருகைக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்தி துலாக்காவடி எடுக்கின்ற முறைமை இன்று காணப்படுகிறது. பனைமரக் கம்பங்கள மூன்றைக் கட்டி முதுகிலே முள்ளைக் குத்தி தொங்கிக் கொண்டு கைகளை அசைத்தவாறு ஆடி ஆடி வருவார். மேலிருந்து ஒருவர் துலாவை ஆட்டிக்கொண்டு வருவர். இதில்பெரும்பாலும் மூன்று முள்ளுக் குத்தப்படும். சிலர் ஒரு முள்ளுக் குத்துவதும் உண்டு. இதில் பெரும்பாலும் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவது குறைவு. காவடி எடுக்கும் கோயிலில் இருந்து இறக்கும் கோயில் வரை ஒலிபெருக்கியிலேயே பாடல்களை ஒலிக்க வைத்துக் கொண்டு வருவர். இதனால் இசை, பாடல், ஆடல்முறைமை என்பவற்றின் தேவை செல்கிறது. சில இடங்களில் காவடி கோயிலில் வந்து இறங்கியவுடன் கோவில் வீதிகளைச் சுற்றும்போது பாடல், இசை என்பவற்றை இசைத்து ஆடப்படும்முறைமை உண்டு.
III
இன்று காவடியானது சமயச் சடங்கில் இருந்து விடுபட்டு படச்சட்ட மேடை, சினிமா போன்றவற்றில் ஆடப்படுகின்ற ஒரு ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட கலைவடிவமாகவும் இருக்கின்றது. “விளம்பர யுகமாவும், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தும் உலகமாகவும் விளங்குகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதநேயத் தேடலுடன் உலகப் பார்வை, சங்கிலிப் பார்வை கொண்டவர்களாக வாழ்ந்தாகவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மண்ணின் மரபுகள் காலங் காலமாகக் கடைப்பிடித்துவரும் பாங்கு உலகெங்கும் வாழும் மக்களிடையே காணமுடிகிறது. பழமையிலிருந்தே புதுமை வார்த்தெடுக்கப்படுகிறது என்பதே இதன்அடிப்படையாக உள்ளது.”10 இந்த அடிப்படையிலே நோக்குகிறபோது, இன்று தமிழ்க் கலைகளைப் பதிவுசெய்தும் வளர்த்தும் செல்ல வேண்டிய நமது இலத்திரனியல் அவற்றை உருக்குலைத்தும் கேலிக்குரியதாகவும் மாற்றி உள்ளன என்றே சொல்ல வேண்டும்.

சடங்கிலிருந்து முற்றாக இது விடுபடும் போது, அது தன் புனிதத் தன்மையினை இழந்துவிடுகின்றது. ஆறு. இராமநாதன் என்பவர் அம்மன் கரகம், ஆட்டக்கரகம்என்பவற்றை வேறுபடுத்துவது இதற்கும் பொருந்தும்
.11 இதனைப் பின்வருமாறு பொருத்திப்பார்க்கலாம். (இதில் சில விடங்கள் இக் கட்டுரை ஆசிரியரால் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.)

சடங்கியல் சார் வடிவம்
/ நிகழ்த்து கலை வடிவம்
1. வழிபாட்டுச் சடங்கின் பிரிக்க முடியாத அம்சம்
/ வழிபாட்டுக் காலங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடைபெறும்
2. நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது.
/ பொழுது போக்கை அடிப்படையாகக் கொண்டது.
3. வழிபடும் குழுவிலுள்ள ஒருவரே காவடியைத் தூக்கமுடியும்.
/ கலைக் குழுவைச் சேர்ந்த எவரும் காவடியைத் தூக்க முடியும்.
4. பயிற்சி எதுவும் தேவையில்லை
/ பயிற்சி தேவை
5. காவடி தூக்கு முன் விரதம் மேற்கொள்வர்
/ விரதம் எதுவும் தேவையில்லை
6. ஆண்கள் மட்டுமே காவடி தூக்க அனுமதி உண்டு
/ ஆண் வேடமிட்டு பெண்களும் காவடி தூக்குவர்.
7. பெரும்பாலும் ஒருவர்
/ பெரும்பாலும் குழுவினர்
8. வழிபாட்டோடு தொடர்புடைய ஒப்பனைகள்
/ பார்வையாளர்களை வசீகரிக்கும் ஒப்பனைகள்
9. காவடி கீழே விழாமல் இருக்கத் தெய்வ சக்தியே காரணம் என நம்பப்படும்
/ காவடி கீழே விழாமல் இருக்க பயிற்சியும் திறமையும் காரணம் என நம்பப்படும்
10. காவடி எடுப்பவர்கள் தெய்வ சக்தி உடையவராக வழிபடப்படுவர்
/ காவடியாடுபவர்கள் சாதாரணமாக கருதப்படுவர்.
11. கோயில் வீதி, ஊர் வீதி என்பன ஆடுகளம் ஆகும்
(நகரும் அரங்கு) / ஊரில் உள்ள வட்டமான மேடை, படச்சட்ட மேடை
12. பின்தொடர்வோர்,
சொந்தக்காரர் பார்வையாளர்களாக இருப்பர் / ஆடுகளத்திற்கு ஏற்ப பார்வையாளர்கள் வேறுபடுவர்
13. சாமி வந்து ஆடுவது தவிர பார்வையாளர்களைக் கவர ஆடுவதில்லை.
/ இசைக்கேற்ப பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் ஆடுவார்கள்
14. மரபு வழியைப் பின்பற்றுவதில் கவனமாக இருப்பர்
/ மரபு வழி ஆட்ட முறைகுறைந்து பாலுணர்வைத் தூண்டும் ஆட்டம் முனைப்புப் பெறும்
15. இடையே காவடி இறக்கப்படுவதில்லை
/ ஆட்ட நேரம் தவிர்ந்த நேரங்களில்காவடி இறக்கப்படும்
16. காவடி தவறி விழுந்தால் சாமி குற்றமாக கருதப்படும்.
/ காவடி தவறிவீழ்ந்தால் திறமையற்றவராக கருதப்படுவர்
17. சடங்கு தொடங்குவது முதல் முடியும் வரை காலம் நீடிக்கும்.
/ ஆடப்படும்இடத்திற்கேற்ப நேரம் வேறுபடும்
18. கூலி எதுவும் பெறுவதில்லை.
/ அதையே தொழிலாகச் செய்பவருக்கு கூலிஅவசியம்.

19. அலகு, முள்ளு என்பன குத்தி எடுக்கப்படும்.
/ அத்தகைய முறைமை இல்லை.
20. பக்திப் பாடல்கள் மட்டுமே இங்கு இசைக்கப்படும்.
/ சில வேளை சினிமாபாடல்களுக்கும் காவடி ஆடப்படும்.

IV
இத்தகைய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, இதனை எந்த வகைமைக்குள் அடக்குவது என்ற பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாது. சடங்கிலிருந்து நாடகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகின்ற சி. மௌனகுரு12 அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.

i. நாடகம் சார்ந்த சமயக்கரணங்கள்
ii. சமயக்கரணங்கள் சார்ந்த நாடகங்கள்
iii. சமயக்கரணம் சாராத நாடகங்கள்

இங்கு நேர்த்திக்கடனுக்காக எடுக்கின்ற காவடியில் கோயில்வீதி, ஊர்வீதி என்பவற்றை நகரும் அரங்காகக் கொண்டு, நிகழ்த்துவோர், பார்வையாளர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் பங்குபற்றுவோராக இருந்து காவடி எடுப்பார்கள். இது புனிதத்தன்மை கொண்டதாக இருக்கும். வன்பக்தி, மென்பக்தி என்ற இருநிலைகளில் எடுக்கப்படும். அலகு, முள்ளு என்பன குத்தி எடுப்பதை வன்பக்திநிலைக்கும், சாதாரணமாக எடுக்கப்படுவதை மென்பக்தி நிலைக்கும் உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய காவடியை ஒருவகையில் சடங்கியல்சார் நிகழத்துகலைவடிவம் என்ற வகைக்குள் அடக்கலாம்.

அதேவேளை படச்சட்டமேடை, சினிமா என்பவற்றில் நிகழ்த்தப்படும் காவடியில் நிகழ்த்துவோர், பார்வையாளர் என்ற நிலை ஏற்பட்டு, முற்றுமுழுதாக சடங்கில் இருந்து விடுபட்ட நிகழ்த்து கலை வடிவமாக இருக்கும். இதில் புனிதத்தன்மை அற்றுப்போய் தாளக்கட்டே முக்கியம் பெறுகிறது. இதற்கேற்ப பாடல், இசை என்பன இருக்கும்.

கலை என்பது ஒற்றைப்படையானது அல்ல. அது எல்லாக்காலத்திலும் ஒரேவடிவத்தைக் கொண்டிருப்பதுமில்லை. அப்படி இருப்பதும் சாத்தியமில்லை. அது காலமாறுதல்களுக்கு ஏற்ப மண்ணின் வாசனையோடு தன்னைமாற்றிக்கொண்டே இருக்கும். இந்தப் பின்புலத்தைக் கொண்டு காவடி பற்றிச்சிந்திக்கிற போது, அது இன்று சடங்கியல்சார் வடிவம், நிகழ்த்துகலை வடிவம்என்ற இரண்டுக்குமான சாத்தியங்கனையும் கொண்டு விளங்குவதைக்காணமுடிகிறது. எனவே இன்றைய நிலையில்உழைப்பினடியாககப் பிறந்து, ஒரே நேரத்தில் சமயக்கரணமாகவும் நிகழ்த்துகலையாகவும் இருக்கின்றகிராமியக்கலை வடிவங்களுள் ஒன்றாகநாம் காவடிக்கலையினைஅடையாளப்படுத்தலாம்.

அடிக்குறிப்புகள்
1. நேர்காணல்: இக்கட்டுரை பற்றி கலாநிதி .மகேஸ்வரன்அவர்களுடன்உரையாடிய போது இத்தகைய முறைமை இன்றும் பழனி, திருவண்ணாமலைபோன்ற ஆலயங்களில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
2. அழகிரிசாமி,கு., (பதிப்பு) (2004) அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து, சென்னை: ..சி நூலகம். அழகிரிசாமி,கு., (முன்னுரை) . 13-14.
3. ஜெயராசா,சபா., (2008) “சமூக முரண்பாடும் நாடக அரங்கும் ஆற்றுகையும் - ஒரு மீள் வாசிப்பு”, ஓலை (ஆடிஆவணி, 2008), கொழும்பு: கொழும்புத்தமிழ்ச்சங்கம். .4.
4. சுந்தரம்பிள்ளை,காரை,. (2000) வடஇலங்கை நாட்டார் அரங்கு, சென்னை: குமரன் புத்தக இல்லம். . 36.
5. அழகிரிசாமி,கு., மேலது. . 11.
6. மேலது. . 11.
7. சுந்தரம்பிள்ளை,காரை,. மேலது. . 35-36.
8. அழகிரிசாமி,கு., (பதிப்பு) (2004) அண்ணாமலை ரெட்டியர் பாடிய காவடிச்சிந்து, சென்னை: ..சி நூலகம். . 57.
9. மௌனகுரு,சி., (2007) ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, சென்னை: குமரன்புத்தகஇல்லம். . 25.
10. குணசேகரன்,கே.., (1993) நாட்டுப்புற நிகழ்கலைகள், சென்னை: நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். . 33.
11. இராமநாதன்,ஆறு., (1997) நாட்டுப்புறவியல் ஆய்வுகள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம். . 246-247.
12. மௌனகுரு,சி., மேலது. . 7
நக்கீரம் (2009,சட்டக் கல்லூரி)