புத்தக வாசிப்பு என்பதை அறைக்குள் நிகழும் ஒரு பொழுது போக்குச் செயலாக நம்மில் பலரும் கருதுகின்றனர். ஒரு நல்ல வாசகனுக்குப் புத்தகம் ஒரு உயிருள்ள பொருள். நல்ல வாசிப்பில் புத்தகத்திற்கு ஊடாக எழுதியவனின் முகம் நிழலாடுவது இயல்பு. படைப்பிலக்கியங்களில் அத்துடன் வேறு பல முகங்கழும் தெரிகின்றன. இந்த உறவினைத் தராத புத்தகம் நல்ல புத்தகம் இல்லை. அல்லது வாசிப்பும் நல்ல வாசிப்பு இல்லை.
(தொ. பரமசிவன்)
இன்றைய சூழலில் படைப்பு, விமர்சனம் என்பன வாசநிலைப்பட்டதாக மாறியிருக்கின்றன. வாசிப்பு, எதிர் வாசிப்பு, கட்டுடைப்பு வாசிப்பு, மீள்வாசிப்பு, வச்சிப்பின் அரசியல் என்ற சொல்லாடல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. காரணம், வாசிப்பு இன்று முதன்மை பெற்றிருக்கிறது. இன்று பெரும்பாலும் படைப்புகள் வாசகநிலையில் இருந்தே புரிந்து கொள்ளப்படுகின்றன. படைப்பு, வாசிப்பு ஆகிய இரண்டின் பிணைப்பும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இலக்கியப் படைப்புக்குள் நுழைகின்ற எந்தவொரு வாசகனுக்கும் வாசிப்புப் பற்றிய புரிதல் அவசியமாக உள்ளது. இதனால் வாசிப்புப் பற்றிய புரிதலுக்குப் படைப்பும் படைப்புப் பற்றிய புரிதலுக்கு வாசிப்பும் அவசியமாக இருக்கின்றன.
ஒரு படப்புக்குள்ளே தன்னை நுழைத்துக் கொள்கிற 'வாசகமனம்' படைப்புப் பற்றிய புரிதல்களை அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஏனெனில், இலக்கியப் படைப்புகள் பன்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இப்பன்மைத் தன்மை உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் உண்டு. இத்தகைய படைப்புகளை வாசிக்கின்ற வாசகனும் ஓத்டைபடியான அல்லது நேர்கோட்டு வாசிப்பின் மூலம் புரிந்துகொள்ள முடியாது. அவன்/ அவள் வாசிப்பினையும் பன்மைத் தன்மை கொண்டதாகவே நிகழ்த்த வேண்டி உள்ளது. இத்தகைய வாசிப்பு முறையே இன்று சாத்தியமாகவும் உள்ள்ளது. இதனால் படைப்பைப் போன்று வாசிப்பும் பன்மைத் தன்மை கொண்டதாகவே அமைகிறது. இவ்வாறு வாசிப்பின் அனைத்துச் சாத்தியங்களையும் உள்ளடக்கியதே வாசிப்பின் அரசியல் ஆகும்.
ஒரு கலைப் படைப்பைப் புரிந்து கொள்கின்ற வாசகன் அக்களைப்படைப்பை பன்மைத்துவம் கொண்ட வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி முக்கியமானதாகும். கலைப் படைப்புகள் பெரும்பாலும் அகவயம் சார்ந்ததாகவே இருக்கின்றன. புறவயத்தன்மை கொண்ட ஏனைய அறிவுத்துறைகள் போன்று ஒரே முடிவினை முன்வைப்பது கடினம். கலைகள் சமூக விதிகளுக்கு உட்பட்டு இயங்குவது போல கலையின் உள்ளார்ந்த விதிகளுக்கும் உட்பட்டு இயங்குகின்றன. எந்தவொரு ஆக்கக் களையும் கலை அல்லாதவற்றில் இருந்து வேறுபடுவது இக்கை விதிகளின் மூலமே. இவற்றையே நாம் ஆக்கவியல் அம்சம் அல்லது அழகியல் என்று கூறுகின்றோம். ஆகையால்த்தான் ஒரு கலையை மதிப்பிடும் போது அதன் கலை விதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி உள்ளது (எம். ஏ.நுஃமான், 1987:12). இதனால் ஒரு கலைப் படைப்பை வாசகன் அப்படைப்புக்குள் இருந்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு கலைப் படைப்பின் உள்ளார்ந்த இயங்கு விதிகளின் ஊடாகப் பயணிக்கின்ற ஒரு வாசக மனத்தாலேயே படைப்பு மனம் நோக்கி நகர முடியும். இல்லாவிடன் அப்படைப்பின் முழுஇக் நோக்கிய நகர்தலை நிகழ்த்த முடியாது இடையில் நின்றுவிட நேர்கிறது. எம். எ. நுஃமான் கூறுவது போல் 'கலைக் கோட்பாடு என்பது ஒன்றே. அதாவது கலைப்படைப்பின் உள்ளார்ந்த விதிகள் ஒன்றாகவே இருக்கின்றன. அதன் வெளிப்பாட்டு விதிகளே வேறுபடுகின்றன. இவையே படைப்பின் தனித் தன்மையையும் தீர்மானிக்கின்றன. இதனை உணராத விமர்சகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இவர்களால் தாம் சாராத கருத்துநிலைசார் படைப்புகளை விமர்சிக்க முடியாது. தமிழ் இலக்கிடப் பரப்பில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இதனால் படைப்பு, வாசிப்பின் வேதிமூலங்களைக் கண்டடைய வேண்டிய தேவை இன்று உணரப்படுகிறது.
"கலைப் படைப்பு என்ப்து ஒரு மன நிகழ்வு. அது குறியீட்டு மொழியினாலேயே கட்டமைக்கப்படுகிறது" என்பார் ஜெயமோகன். இலக்கியம் மொழியின் குறியீடுகள் வழியாக வாசக மனத்தைச் சென்றடைகிறது எனலாம். ஏனெனில் கலைப் படைப்புகள் ஏனைய அறியுத்துரைகள் போன்று புறவயம் சார்ந்த ஒன்று அல்ல. அவை அகவயம் சார்ந்தவையும் கூட. "பனுவல் குறித்த ஊகங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்பவனாகவும், மாற்றிக் கொள்பவனாகவும், சில நேரங்களில் வெளியே இருந்து பல கருத்துக்களை இடப்பெயர்ச்சி செய்து கொள்பவனாகவும் அல்லது மொத்தமாகக் கைவிடுபவர்களாகவும் வாசகர்கள் ஒரு பனுவலுக்குள் பல்வேறு நிலைகளில் இயங்குகின்றனர்"(பஞ்சாங்கம், 2003: 127). இதனால் குறியீட்டு மொழியினை விரித்துச் செல்லும் மனப்பக்குவமும் கட்ப்பனைத் திறனும் ஒரு வாசகனுக்குத் தேவை. இதற்குப் பயிற்சி மிக அவசியம்.
ஒரு பன்மைத்துவம் கொண்ட படைப்பு ஒரே நேரத்தில் பல அனுபவங்களையும் செய்திகளையும் தர முடியும். இன்றைய சூழ்நிலையில் விரும்பியோ விரும்பாமலோ ஏனைய அறியுத் துறைகளையும் உள்வாங்கிச் செல்ல வேண்டிய தேவை கலைப் படைப்புகளுக்கு உள்ளன. ஏனைய அறிவுத்துறைகளின் உள்வான்குகை என்பது அதன் அழகியலை ஊரு செய்யாத வண்ணம் அமைதல் வேண்டும் என்பது முகிஇயமான விடயம். இதனால் கலைப் படைப்புகளைத் தனியே அகவயம் சார்ந்த ஒன்றாக அடையாளப்படுத்த முடியாத சூழல் உள்ளது. அவை புறவயம் சார்ந்தும் இயங்க வேண்டி உள்ளது. இதனாலேயே மு. தளையசிங்கம் போன்றோர் 'கலை கலைக்கானது' என்ற வாதத்தையும் 'கலை பொருளை முதன்மைப் படுத்தியது' என்ற வாதத்தையும் நிராகரித்தனர். சிலவேளை படைப்புகள் சிலவற்றை ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்வது என்பதும் சாத்தியம் அறறதாக இருக்கின்றன. எனவே ஒரு கலைப்படைப்பின் உள்ளார்ந்த இயங்கு விதிகளைப் புரிந்து கொள்கின்ற மனப் பக்குவமும் புறநிலைநின்ற பார்வையும் ஒரு வாசகனுக்கு அவசியம் எனலாம்.
I
இத்தகைய வாசிப்புப் பின்புலத்தில் இருந்து கொண்டே இரா. நடராஜனின் 'ஆயிஷா' என்ற படைப்பினைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆயிஷா என்ற படிப்பினை வாசித்த பலரும் தமது மனப் பதிவுகளைப் பல கோணங்களில் பதியு செய்துள்ளனர். அத்தகைய சில வாசிப்புக் கோலங்களை இங்கு பார்ப்போம்.வாசிப்பு - 2
குழந்தைகளின் இயல்பான படைப்புத்திறன், விமர்சன மனப்பான்மை, அறிவியல்க் கண்ணோட்டம் எப்படி நம் பள்ளிகளில் மழுங்கடிக்கப்பட்டு அவர்கள் மந்தையாக்கப் படுகிறார்கள், அதிலிருந்து விலகித் தனித்துவமான விஞ்ஞானியாக வளர்வது எவ்வளவு கடினம் என்றெல்லாம் சித்திரிப்பதோடு, தமிழில் அறிவியல்ப் புத்தகங்கள், குழந்தைகளின் வழக்கமான வாழ்வை ஒட்டிய வினாக்கழுக்கு எளிதான விடைதரும் புத்தகங்கள் இல்லாத சூழ்நிலையையும் சுட்டிக் காட்டுகிறார், நடராஜன்.அத்தோடு படுதாவில் இருக்கும் இஸ்லாமியப் பெண்களின் குடும்பத்தில் வளரும் பெண் குழந்தை ஆயிஷாவின் பார்வை அம்மாதிரி எத்தனையோ பெண்களின் வளர்ச்சியில், காட்டப்படாத அக்கறையை நினையூட்டுகிறது.
(இராமானுஜம்: நூல் முன்னுரை)
வாசிப்பு - 2இக்குறுநாவலை மூன்று காரணங்களால் எல்லோரும் (குறிப்பாக எழுத்தாளர்கள்) படித்தாக வேண்டும்.
1. யதார்த்த இலக்கியம் செத்துப்போச்சு என்பவர்களுக்கு இது பதில். அதே சமயம் யதார்த்தம் என்பது சில சம்பவப்பதிவுகள் மட்டுமே என இயந்திர கதியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. சமூகத்தில் சில போக்குகளை விமர்சனக் கண்ணோட்டத்தை படைப்பிலக்கிய யுக்தியோடு சொல்வதும் யதார்த்த இலக்கியமே. இக்குறுநாவல் அதற்கொரு உதாரணம.;
2. வடிவங்கள், யுக்திகள் மிகமுக்கியம். இந்த குறுநாவலை ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை எழுதுவதாக அமைத்திருப்பதால் ஆசிரியருக்கு விமர்சனச் சாட்டையைக் கொடுக்க விரிவான தளம் கிடைத்தது. இதுபோல் கற்பனையோடு புதிய வடிவங்களைத் தேட இக்குறுநாவல் தூண்டுகிறது.
3. இயந்திரமாகிப் போன ஆசிரியர்கள், பலியாடாகிப்போன மாணவர்கள், தமிழில் புத்தகங்கள் இல்லாமை, எழுத ஆசிரியர்கள் முயற்சிக்காமை, பெண்களின சோகம் இப்படிக் கனமான செய்திகளை பிரச்சார நெடியின்றி உறுத்தல் இன்றி மௌ;மையான நெஞ்சோடு பேசச் செய்ய முடியும் என்பதை இக்குறுநாவல் செய்து காட்டி இருக்கிறது.
(சு.பொ.அகத்தியலிங்கம், சென்னை)
வாசிப்பு – 3“நடராசனின் குறுநாவல் மனதை ஏதோ செய்தது”
(தமிழ்ப்பரிதி, நெல்லிக்குளம்)
“ஆயிஷா சிறுகதை அறிவியல் பொக்கிஷம்”வாசிப்பு – 4
(எஸ்.மு.நாஸர, வத்தலகுண்டு)
வாசிப்பு – 5“இந்நாவல் ஓர் உண்மைச் சம்பவம் போலிருக்கிறது. ஆசிரியர் கூறியபடி சுமார் ஆறு பெண்கள் இந்நாவலைப் படிக்கும்படி செய்துவிட்டேன். அவர்கள் இது உண்மையில் நடந்த கதையா என்று கேட்குமளவிற்கு சிறப்பாக இமைந்திருந்தது. மிகவும் பாராட்டுக்குரியவர் ஆசியர் அவர்கள்தான்.”
(முத்து எத்திராசன்)
வாசிப்பு -6“இரா. நடராஜனின் இக்குறுநாவல் கதைப்பொருளிலும் வடிவத்திலும் புதுமையாக விளங்குகிறது. கதைபடிக்கும் வாசகர் இதனை ஓர் இலக்கிப் படைப்பாக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுவர். இக்குறுநாவலுக்கு அதன் ஆசிரியர் இரா.நடராஜன் ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற குறிப்பை அடைப்புக்குறிக்குள் தந்துள்ளார். ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை வடிவிலே இக்குறுநாவலின் வடிவம் அமைந்துள்ளது.”
(கலாநிதி துரை. மனோகரன், இலங்கை)
இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகிற போது, இதில் முக்கியமாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஒன்று, எல்லோரும் கதைப்பொருளிலும் வடிவத்திலும் புதுமையாக விளங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இரண்டு, இதனை சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற புனைகதையின் வடிவத்துள் ஏதோ ஒரு வகையாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்குரிய பிரக்ஞையை ஒருவரும் முன்வைக்கவில்லை. இத்தகைய வாசிப்பு முறையில் இருந்து விடுபட்டு ஆயிஷா என்ற படைப்பினை எத்தகைய வகைமைக்குள் அடக்குவது சாத்தியம், அதில் உள்ள பிரச்சினைகள் என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
II
ஒரு இலக்கியப்படைப்பின் பல தளப்பொருண்மை பற்றிய விவாதங்கள் முனைப்புப் பெற்றுள்ளன. கூடுதலாக அமைப்பியல் மற்றும் பின்அமைப்பியல் வாதிகளின் ‘படைப்பாளியின் மரணம்’ பற்றிய கருத்தாடல்களின் பின்னர் இத்தகைய முறைமை மேலும் முனைப்புப் பெற்றுள்ளது. ஆனால் முற்றாக ஆசிரியனை நீக்கிவிட்டு படைப்பு செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பலதளப் பொருண்மையின் தோற்றம் பற்றிய விவாதங்களை எம்.ஏ. நுஃமான் போன்றோர் முன்வைத்துள்ளனர். ஆனால் மறுவாசிப்பின் தேவையும் முக்கியத்துவமும் இன்று அனைவராலும் உணரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். இரா.நடராஜனின் ஆயிஷா என்ற படைப்பினை ஒரு தடவையில் வாசிக்கின்ற சாதாரண வாசகனுக்கு ஆயிஷா என்ற குழந்தைக்கு நேருகின்ற கொடுமைகளைச் சித்திரிக்கின்ற ஒரு படைப்பாகவே தோன்றும். அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்ற போதே அதன் சமூக யதார்த்தத் தளத்ததையும் பொதுமைத்தையும்; மேலும் விரித்துச் செல்ல முடியும்.படைப்புகளில் உள்ளடக்கத்தில் மாத்திரம் பன்மைத்துவம் இருப்பதில்லை. அதன் வடிவத்திலும் இருக்கிறது. இன்றைய சூழலில் ஓர் இலக்கிய வகைக்குரிய தனித்துவமான வடிவம் ஒன்றினை வரையறை செய்வதென்பதும் கடினம். இன்றைய படைப்புகள் பல உரைநடையின் அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்துகின்றன. உரைநடை என்னென்ன தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றதோ, அத்தேவைக்கேற்ப எவ்வாறு வடிவமாற்றங்களைப் பெறுகின்றதோ, அவ்வடிவ மாற்றங்களைச் சிறுகதையாசிரியர்கள் கதை சொல்லுவதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்(செ.சுதர்கன் 2008: 49). என்று கூறுவது ஏனைய வடிவங்களுக்கும் பொருந்தும். நடராஜன் ஒரு நூலுக்கான முன்னுரை வடிவிலே தனது படைப்பபைத் தந்திருப்பது அதன் வடிவத் தனித்தன்மையைக் காட்டுகிறது.
இதனால்தான் இன்று ‘எடுத்துரைத்தல்’ என்ற விடயம் முதன்மைப் படுத்தப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் ஒன்றினை வார்த்தைக் கோர்ப்புகளால் எடுத்துரைத்து புனைவின் மொழிக்குள் கொண்டுவரும் செயற்பாட்டினை எடுத்தரைத்தல் என்று, ஓரளவு எளிமையாக வரையறை செய்து கொள்ளலாம். சிலவேளை சாதாரண புனைகதை அல்லாதவற்றுள் கூட புனைவின் மொழி இருக்கும். அதேவேளை புனைகதைகளில் அத்தகைய தன்மையைக் காணமுடியாது. காரணம் எடுத்துபை;பில உள்ள சிக்கல்கள்தான.; சாதாரண விடயங்களை புனைவின் நெகிழ்வுத் தன்மையோடு புனைகதையாக அல்லது இலக்கியமாக மாற்றுவது எடுத்துரைப்பின் செயற்பாடுகளில் ஒன்று. எடுத்துரைப்பில் உள்ள மொழிக் கையாள்கையின் தன்மைகளே புனைவு மொழியின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. ஆயிஷாவில் சாதாரணமான ஒரு நூலுக்கான முன்னுரை வடிவத்தை புனைவின் தருக்கத்துக்குள் கொண்டு வந்கிருக்கிறார், ஆசிரியர்.
ஓர் இலக்கியப் படைப்பின் கருத்தியல் தளம், வடிவம் என்பன பல்வேறு கோடுகளை நோக்கி நகர்வது போல அதனை எந்த வகைமைக்குள் அடக்குவது என்ற பிரச்சினையும் சில படைப்புகளுக்கு ஏற்படுவதுண்டு. ஏனெனில,; எந்தவொரு படைப்பாளியும் இதை இந்த வடிவத்துக்குள்த்தான் எழுதப் போகிறேன் என்ற பிரக்ஞையோடு எழுத உக்காருவதில்லை. படைப்பு மனத்தின் கொதிநிலையே அதன் வெளிப்பாட்டு முறைமையைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, புதுமைப்பித்தன் தனது கதைகளின் பிறப்புப் பற்றிப் பின்வருமாறு கூறுவதில் இருந்து இதனை விளங்கிக்கொள்ள முடியும்.
“நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை. இதை நான் ஸ்பட்ஷமாகச் சொல்ல வேண்டியதில்லை; நான் விபரித்த உதாரணங்களே போதும். என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும், வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாக எப்பொழுதும் பல இருந்து கொண்டே இருக்கும் அக்கதைகளில் இருந்து கொண்டுதான் எடுத்துக் கொள்வேன். கதை எழுதும் சிலர் இதனை விபரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் வைத்திருப்பார்கள். நான் அப்படியல்ல ஞாபகமறதிக்கு எளிய வசதியளிப்பேன். அதையும் தப்பி வந்தவையே ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்ற கோவையும் பிறவும்”(புதுமைப்பித்தன் 2002 : 45 )
ஓர் இலக்கியப்படைப்பின் அளவினை வைத்துக்கொண்டு அதனை சிறுகதை, குறுநாவல், நாவல் என்று வகைப்படுத்துவது கடினம். புதுமைப்பித்தனின் துன்பக்கேணியில் இருந்து பல சிறந்த உதாரணங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் உண்டு. ஆயிஷா என்ற படைப்பினை வாசிப்புக்கு உட்படுத்தியர்கள் சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற வடிவங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளர். ஆனால் அதன் பிரக்ஞை பற்றி விவாதிக்கவில்லை என்று மேலே பார்த்தோம். இதனை நாவல் என்று குறிப்பிடுவது பொருத்தமில்லை. அது நாவல் தருகின்ற வாழ்க்கையின் தரிசனத்தைத் தரவில்லை. ஆனால் சிறுகதை, குறுநாவல் இரண்டுக்குமுரிய சாத்தியங்களைக் கொண்டிருப்பதனைக் காணமுடிகிறது. இதனால் இதை வாசிக்கின்ற வாசகனுக்கு சிறுகதை என்பதா, குறுநாவல் என்பதா அல்லது அவை இரண்டுக்கும் இடைப்பட்ட இன்னொரு வடிவத்ததைக் கண்டடைவதா என்ற பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாதது. அத்தகைய பிரச்சினையை வாசிப்பின் மூலமாகவே தீர்க்க முடியும். ஏனெனில், இலக்கியத்தை வரைவிலக்கணப்படுக்குவது என்பது கடினமான விடயமாகும். பொதுவாக வாசிப்பின் மௌனமும் இடைவெளிகளுமே அதனைத் தீர்மானிக்கின்றன.
ஆயிஷா படைப்பினை சிறிய நேரத்துக்குள் வாசிக்க முடிகிறது. அதனால் அதனைச் சிறுகதை என்று கருதலாம். இதே போல குறுநாவலிலும் சிறுகதையைப் போல ஒரு துளியில் பிரதிபலிக்கும் காலமே வருகிறது. எனவே, எந்தக் குறுநாவலிலும் காலம் பிரவாகமாகத் தென்படுவதில்லை, நகர்வாகவே காட்சி தருகிறது (ஜெயமோகன்1994 : 57). ஆனால், சிறுகதையைப் போன்று ஒற்றைப்படையான நகர்வை ஆயிஷாவில் காணமுடியவில்லை. ஒரு புளியமரத்ததை மையப்படுத்தி சமூக அசைவியக்கங்களைச் சித்திரிக்கின்ற சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற நாவலைப் போல ஆயிஷா படைப்பும், ‘ஆயிஷா’ என்ற குழந்தையை மையப்படத்திய நகர்வாக சமூக யதார்த்தப் பிரச்சினையின் பல முகங்களை எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஆயிஷா படைப்பின் முடிவை வைத்துக் கொண்டு அதனை சிறுகதை என்று ஒருவர் வாதிட முடியும். காரணம் அதன் முடிவு சிறுகதையின் முடிவை அண்மித்ததாகவே உள்ளது. அதன் முடிவு,
‘மிஸ்…கரோலின் ஏர்சல் போலவோ, மேரிகியூரி போலவோ நம்ம நாட்டில
பெயர் சொல்கிறா மாதிரி ஒரு பெண்கூட விஞ்ஞானியா வரமுடியலையே
ஏன்?’
இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தனது
சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள்
அதைத் தேடட்டும்.
என்று முடிகிறது. ஒரு சிறுகதையின் முடிவானது அதன் புள்ளியிலிருந்து வாசகமனத்தை விரிவடையச் செய்வது போல இதனுடைய முடிவும் அமைந்திருக்கிறது. ஏனெனில், சிறுகதையின் மௌனம் அதன் முடிவுக்குப் பிறகு இருக்கிறது. சிறுகதையின் முடிவு ஒரு மறு தொடக்கம். அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தச் செய்கிறது அது. மேலும் அதுவரை கூறப்பட்ட அனைத்தையும் பலநூறு புதுத்தளங்களுடன் நுட்பமாகப் பிணைத்து விடுகிறது. நவீன இலக்கியப் படைப்புகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்று அனைத்து இலக்கிய வடிவங்களுக்குள்ளும் கவிதையைத் தொடமுயல்வது. நவீன சிறுகதை தன் வரிகள், சொற்களுக்கு இடையேயும் மௌனத்தைக் கொண்டுள்ளது. நாவலின் மௌனம் அதன் இடைவெளிகளிலேயே இருக்க முடியும்(ஜெயமோகன் 1994:06). ஆனால், ஒரு சிறந்த குறுநாவலுக்குரிய முடிவும் வாசக மனதை விரிவடையச் செய்யும். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக நாம் ஆயிஷாவின் முடிவினையும்; கொள்ள முடியும்.
கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்ற வடிவங்களில், சிறுகதைக்கு அடுத்தபடியாகச் சொற்களுக்குள் மௌன இடைவெளிகளைக் கொண்டதாக விளங்குவது குறுநாவலாகும். அந்த வகையிலே பார்க்கிற போது, ஆயிஷா படைப்பில் மௌனம் குறைந்து இடைவெளிகளே அதிகமாக இருக்கின்றன. சில இடங்களில் நாவலைப் போன்று இடைவெளி அதிகமாக இருக்கிறது. நல்ல குறுநாவல் சொற்களுக்கிடையே மௌனத்தையும் இடைவெளிகளையும் கொண்டிருக்கும். இத்தகைய சிறந்த குறுநாவல்கள் தமிழில் குறைவாகவே உள்ளன. இரா. நடராஜனின் ஆயிஷாவில் சில இடங்களில் மௌனம் இருக்கிற போதும் இடைவெளிகளே அதிகமாக உள்ளன. இவ்வாறு பார்க்கிற போது இதனைச் சிறுகதையாகக் கொள்வதைவிட குறுநாவலாகவே கொள்ளவதே சாத்தியமாக உள்ளது. ஏனெனில் ஒருவகையில் சிறுகதை நாவல் இரண்டின் செல்வாக்கும் கொண்டதாகவே குறுநாவல் அமையப் பெறுகிறது. சிறுகதையின் சாத்தியங்களை அதிமாகக் கொண்டிருக்கும் போது, அக்குறுநாவல் உச்சத்தை அடைகிறது.
இப்படைப்பினை வாசிப்புக்கு உட்படுத்தும் சிலர் அதனை சிறுகதை என்றும் வாதிட முடியும். அதற்கான பல கூறுகளும் அதில் இருக்கின்றன. மு. தளையசிங்கம் போன்றோர் கூறுவது போல இலக்கியப் படைப்பு என்பது உள்ளடக்கத்தில் மடடுமல்ல வடிவத்திலும் விடுதலை அடைய வேண்டும். அதேசேளை வாசிப்பு என்பதே தவறான வாசிப்பு என்பதன் மூலம் கட்டமைத்துக் கொள்கின்ற செயற்பாடுதான் (பஞ்சாங்கம் 2003:10) என்ற குரலும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இலக்கியப் படைப்பின் எல்லாப் பொதுமைகளையும் சிதைவாக்கம் செய்ய முடியாது. அது தரும் அனுபவம் அல்லது தரிசனம் என்பது இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு இலக்கியப் படைப்பு ஒரே நேரத்தில் இரண்டு வகைக்குரிய சாத்தியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரண்டுமாக இருக்க முடியாது. இதன் காரணமாக சில படைப்புகளை அது தரும் அனுபவம் அல்லது தரிசனத்திக் ஊடாகவே அதன் வகைமையினைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. சிலவேளை இரண்டுக்கும் இடையிலான இன்னோர் புதிய வடிவம் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. அத்தகைய வாசிப்புக்கு இன்றைய படைப்புகள் பல இடந்தருகின்றன. இத்தகைய வாசிப்பினை அயிஷா படைப்பு மீதும் மேற்கொள்ள முடியும். ஆனால், அது என்ன வடிவம் என்று பெயர் சூட்டுவதிலும் சிக்கல்கள் உண்டு.
இப்போதைக்கு இரண்டு வடிவங்களுள் எதற்குரிய சாத்தியங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறதோ அந்த வடிவமாக அதனை வரையறை செய்யலாம். மேலே குறிப்பிட்டவற்றைத் தொகுத்து நோக்கும் போது, குறுநாவலுக்குரிய சாத்தியங்களையே அதிகமாகக் கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக, ஆயிஷா படைப்பின் நகர்வு, அதன் சொல்லாளளடல் முறைமை என்பனவும் குறுநாவலுக்குரிய சாத்தியங்களையே அதிகமாகக் கொண்டுள்ளன.
இந்தப் பின்புலத்தில் இருந்து பார்க்கிற போது, இன்றைய படைப்புகள் பலவும் அதன் தர்க்கங்களை மீறக்கொண்டே இருக்கின்றன. பல படைப்பாளிகள் வித்தியாசமான கதையாடல் முறைமைகளைக் கையாள்கிறார்கள். பலர் வித்தியாசமாகக் கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே கதை எழுதுகிறார்கள். சிலருடைய கதைகளில் கதையே இருப்பதில்லை. சிலவேளை அவைகளில் வித்தியாகங்கள மட்டுமே எஞ்சியிருக்கும். வேறு ஒன்றையும் காணமுடியாது. அத்தகைய முறைமையில் இருந்து மாறுபட்டு, இரா.நடராஜனின் “ஆயிஷா என்ற படைப்பு ஒரு விஞ்ஞான நூலுக்கான முன்னுரை வடிவிலே வித்தியாசமான கதைசொல்லல் முயைமையினையும், யதார்த்தமான சமூக அக்கறை கொண்ட கதையமைப்பினையும் கொண்டு விளங்குகிறது. எனவே, யதார்த்தமும் கலையழகும் மிக்க ஒரு குறுநாவலாக இதனைக் அடையாளப்படுத்த முடியும்.
(ஞானம் நூறாவது மலர்)