Monday, July 27, 2009

ஆனந்தமயிலின் படைப்புலகம் - ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய பக்கம்

(இக்கட்டுரை முழுமையாய் வலையேற்றம் செய்யப்படவில்லை )

“ உதாரணமாகச் சொல்லப் போனால் ரஞ்சகுமார், உமாவரதராஜன் போன்ற இப்போது முக்கியம் பெறுகின்ற எழுத்தாளர்கள் அலையிலிருநடதுதான் கவனத்தைப் பெற்றார்கள். அது தவிர குந்தவை, ஆனந்தமயில், ச.ராஜகோபாலன் போன்ற வித்தியாசமான எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள்.”1
( குப்பிளான் . சண்முகம்,2006: 15 )

அலை இதழில் அறிமுகமான முக்கியமான எழுதத்தாளர்கள் பற்றிய தனது கருத்தாடலை மூன்றாவது மனிதன் பதினேழாவது இதழுக்கான பேட்டியில் முன்வைத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ. சண்முகம் அவர்கள் மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது பலரையும் போன்று யார் இந்த ஆனந்தமயில் என்ற கேள்வி எனக்கும் இருந்தது. ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கும்வரை அவரது படைப்புகளை வாசிக்பும் வாய்ப்பக் கிட்டவில்லை. இத்ததைய நிலை பலருக்கும் இருந்திருக்கக் கூடு;ம். இத்தொகுப்பபை வாசத்து முடித்தபின் இவர் ஈழத்து இலக்கியப் பரப்பிவ் பலரது கவனத்ததையும் பெறுவார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆறு சிறுகதைகளையும், ஐந்து கவிதைகளையும் கொண்டு எண்பதுகளின பிற்பகுதியில் வெளிவர இருந்த இவரது தொகுப்பு இப்போது பன்னிரண்டு சிறுகதைகளை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அப்போது வெளியிடத் தீர்மானிக்கப்பட்ட படைப்புகயை முன்வைத்து முருகையனால் எழுதப்பட்ட முன்னுரையோடும், குப்பளான் ஐ.சண்முகத்தின் எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தோடும் வெளிவந்திருக்கும் இந்நூலைத் தொகுத்திருக்கிறார் இவரது மகன் நித்திலவர்ணன். ஆத்தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் எழுபதகளின் பிற்கூற்றிலிருந்து தொண்ணூறுகளின் பிற்கூற்றுவரையான காலப்பகுதியில் எழுதப்பட்டவை.

தமிழ் இலக்கியப் பரப்பில் சில சிறந்த படைப்பாளிகள் பலகாலம் அறியப்படாமல் காலம் தாழ்த்தியே அறியப்பட்டார்கள், அறியப்படுகிறார்கள். இதற்கு அவர்களது படைப்பக்கள் தொகுதிகளாக வெளிவராமையும் ஒரு காரணமாகும். எழுபதுகளில் எழத ஆரம்பித்துப் பல கலைத்துவமான சிறுகதைகளைத் தந்த எஸ்.எல்.எம்.ஹனிபா தொண்ணூறுகளில் வெனிவந்த அவரது 'மக்கத்தச் சால்வை' என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடாகவே பலரத கவனத்ததையும் பெற்றார். அதே போன்று ஆனற்தமயிலும் இப்போது வெளிவற்திருக்கும் அவரது 'ஓர் எழுதுவினைஞனின் டயறி என்ற அவரது சிறுகதைத் தொகுப்பின் மூலம் பலரது கவனத்ததையும் பெறத் தொடங்குகிறார் என்று சொல்லலாம்.

இப்பின்புலத்தில் பார்க்கிற போது, இழத்துச் சிறுகதை வரலாற்றில் அருக்கான இடம் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு பற்றிய நூலினைத் தந்த கலாநிதி க.குணராசா2 (செங்கை ஆழியான்) 60-70 வரையான காலப்பகுதியில் எழுதிய சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய பட்டியலில் ஆனந்தமயிலின் பெயரையும் 'ஒற்றைக்காலக் கோழி என்ற சிறுகதையையும் தந்திருக்கிறார். அதற்குப்பின் அவருக்கு இடமில்லை. இதைவிட வேறு குறிப்புகள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பற்றியும், ஈழத்து இலக்கிய வரலாறு பற்றியும் எழுதியோரின் குறிப்புகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

இதன் தொடர்ச்சியாக ஆனந்தமயிலின் படைப்புலகம் எத்தகையது, இதனை எவ்வாறு வினங்கிக் கொள்வது, ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அவர் பெறும் இடம் என்ன அல்லது அவருக்கான இடம் வழங்கப்பட்டுள்ளதா, அப்படியாயின் அதனை எவ்வாறு வரையறை செய்வது, அதில் உள்ள சிக்கல்கள் என்ன? போன்ற வினாக்கள் எழுந்த கொண்டே இருக்கின்றன. இன்றைய வாசகனுக்கு எழும் இத்தகைய கேள்விகள் தவிர்க்க முடியாதவையாகும். இத்தகைய வினாக்கள் கிளர்த்தும் சிந்தனையோட்டத்தின் வழியே ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ஆனந்தமயிலின் படைப்புலகத்தை விளங்கிக் கொள்ள முற்படுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

I
சில படைப்பானிகள் அதிகமாக எழுதுவதில்லை. ஆனால் அவர்களது படைப்புகள் அதிக மனவதிர்வகளை ஏற்படுத்தவதாக இருக்கும். பெரும்பாலும் இவர்கள் படைப்பமன உந்துதலின் போதே தமது படைப்புகளை வெளிக் கொணர்கிறார்கள். அடியாழத்திலிருந்த படைப்புமன உந்துதலால் எழுதுகின்ற படைப்பாளியாகவே ஆனந்தமயில் நமக்குத் தோன்றுகிறார். கலைப்படைப்பு என்பத அறிவு, மனம் ஆகியவற்றின் வினையாற்றலால் கட்டமைக்கப்படுகின்ற வாழக்கையின் அனுபவ வெளிப்பாடாக வருவது. அதனால் அதனைத் தனியே எதார்த்தப் பிரதிபலிப்பாக அடையாளப்படுத்த முடியாது. அதைவிடவும் விரிவானது.அது சமூக அனுபவங்களைக் கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, அவை கிளர்த்தும் உணர் கொதிநிலைகளில் பிறப்பது. இத்தகைய படைப்புகள் சமூக அழகியற்தளம் கொண்டவை. பெரும்பாலும் ஆனந்தமயிலின் படைப்புகள் இத்தகைய தளத்தியே எழுகின்றன.

ஆனந்தமயிலின் படைப்புலகம் மிகவும் சிறியது. ஆனால், ஆழமும் நுட்பமும் நிறைந்தது. இவரது பெரும்பாலான படைப்புகள் புறவுலம் சார்ந்தவை அல்ல. பெரும்பாலும் இவை மென்மையான அகவுணர்வுகளையே கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றன. அத்தோடு சமூக யதார்த்தமும் கலைப்பாதிப்பும் மிக்கவை. கறாரான சமூகப் பிரச்சினைகளைப் பேசும் போது கூட, அவை பிரசாரம் செய்யவில்லை. முற்போக்குச் சிந்தனையை வெளிக்கொணரும் ‘திருவிழா’ என்ற கதையைப் படிப்போருக்கு, அதன் சமூக அழகியற் தளம் புலப்படும். எல்லாவற்றுக்கும் அப்பால் இவரது கதைகளில் இயங்கும் மென்மையான உணர்வின் உயிரோட்டமும், அதனை மொழிப்படுத்தும் விதமும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன.

இலக்கியம் ஒரு மொழிக்கலை. அது முழுக்க முழுக்க மொழியைச் சார்ந்தே இயங்குகிறது. அதன் வெற்றியும் மொழிக் கையாழ்கையில்தான் தங்கியிருக்கிறது. ஆனந்தமயிலின் பலம் மென்மையான உணர்வுகளை மொழிப்படுத்;துகின்ற முறையில்தான் இருக்கிறது. இவரது கதைகளில் ‘ஒற்றைக்கால் கோழி’, ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’, ‘காக்காச்சி கரிமகளே’, ‘திருவிழா’, ‘நண்பனும் ஒரு புளியமரமும்’, ‘விதி’, ‘விளக்கீடு’ போன்ற கதைகள் சிறந்த படைப்புகள் என்பது என் எண்ணம். ‘ஒற்றைக்கால் கோழி’, ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’, ‘காக்காச்சி கரிமகளே’, ‘நண்பனும் ஒரு புளியமரமும்’, ஆகிய கதைகள் வெளிப்பாட்டு முறையிலும், மொழி நடையிலும் தனித்துவமானவை.

ஓர் எழுத்தாளனின் மன உணர்வுகளை ஓர் ஒற்றைக்கால் கோழியை வைத்துக்கொண்டு கிண்டல் மிகுந்த நடையில் ‘ஒற்றைக்கால் கோழி’ என்ற கதையை நகர்தியிருக்கும் விதம் சிறப்பானது. அதே போன்று ‘ஓர் எழுதுவினைஞனின் டயறி’ என்ற கதையை டயறிக் குறிப்புகள் ஊடாக நகர்த்தியிருக்கிறார். இக்கதையின் முடிவிலே தொகுப்பாசிரியர் “இச்சிறுகதையின் முடிவுப்பகுதி தவறிவிட்டது; வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்” என்ற குறிப்பைத் தந்திருக்கிறார். இக்கதையை வாசித்து முடித்தபின் அது முடியவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. அதிலே வருகின்ற டயறிக் குறிப்புகளை எழுதியவர் அதற்கு மேல் எழுதாமல் விட்டிருக்கலாம்; அத்தோடு முடிகிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. சிறுகதையின் முடிவு என்பது கதையின் மறு தொடக்கம் என்பர். அது வாசக மனதில் எழுதாத பல பக்கங்களை எழுத வைக்கக்கூடியது. அத்தகைய ஆற்றல் இக்கதைக்கும் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

ஆனந்தமயில் மொழியைக் கையாழும் விதம் தனித்துவமானது. பெரும்பாலும் அவை ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இல்லாதவை. பல இடங்களில் இவரது மொழி கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது. உதாரணமாக, ‘ஓர் எழுதுவிளைஞனின் டயறி’ என்ற கதையில் வரும் பின்வரும் வரிகள் இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

“எத்தனை மாலை நேரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
ஏன் தனிமையை நாடுகிறீர்களோ!
நான் இப்போதும் பேசவில்லை. மெல்லிய அழுகுரல் அது….
அது அவனுடையதுதான். யாருக்கானது – என்கானதா….
இதென்ன பிரிந்தா….!
பூப்போன்ற கைகளைப் பிடித்த போது அவள்
அதிசயித்திருக்க வேண்டும். சிறு நடக்கம்.
அவள் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
என்னை நானே விடுவித்த போது ஏக்கப் பெருமூச்சுத்தான் எழுந்தது.”3

இதை அடுத்து எமக்கு ஏற்படும் பிரச்சினை என்னவெனில் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் ஆனந்தமயிலுக்குரிய இடம் என்ன அல்லது அதை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதே. இக் கேள்வி மிகவும் சவால் மிகுந்த ஒன்றாகும். ஏனெனில் இவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, இவரது தொகுதி கிடைக்கையில் மூன்று தசாப்தங்கள் கடந்து விட்டோம். இதற்குள் ஈழத்துச் சிறுகதை பல புதிய தளமாறுதல்களைப் பெற்றுவிட்டது. இதனால் இவரது கதைகளை அக்காலகட்டத்தில் வைத்து நோக்குவதே பொருத்தமானது. அத்தோடு எல்லா காலத்தையும் கடந்து எம்மை வசீகரிக்கும் செய்யும் ஆற்றல் இலக்கியத்திற்கு உண்டு. எக்காலத்திற்கும் பொருத்தமான அழகியல் இலக்கியத்தில் இருக்கவே செய்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் சங்க இலக்கியம் எம்மைக் கவரவில்லையா? இத்தொகுப்பு முன்னுரையில் முருகையன் அவர்கள் கூறும் பின்வரும் கருத்து இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக இருக்கும்.

“இலக்கியத்தரம், இலக்கியத்திறன் எனப்படும் சில பெறுமதி வாய்ந்த விழுமியங்கள் இல்லையா? ஏன் இல்லை. நிச்சயமாக உண்டு. …. …. அதுதான் இலக்கியக் கலையின் இரகசியம். ஆரவாரமான சலசலப்பையும் பரபரப்பையும் கடந்த அடியாழத்தில் உள்ளோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உன்னதமான உயிரியக்கம்; நிதானமான அமைதியும் கருத்தூன்றிய கலைத்திறன் செறிந்த உழைப்பும் தோற்றுவிக்கும் பரிசு; அது வாசக உலகம் முழுவதற்குமான பரிசு.”4

ஆனந்தமயில் எழுபதகளின் பிற்கூற்றிலிருந்து எழுதத் தொடங்குகிறார.; ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இது முக்கிய காலகட்டமாகும். ஏனெனில் எழுபதுகழுக்குப்பின் ஈழத்துச் சிறுகதையில் சில புதிய போக்குகள் உருவாகத் தொடங்கின. இதற்கு முன் குறிப்பாக அறுபதுகளில் இலக்கியத்தில் உள்ளடக்கமே முதன்மைப் படுத்தப்பட்டது.5 ஆனால் எழுபதுகளின் பின் அல்லது எண்பதுகளிலிருந்து. உள்ளடக்கம், அதன் வெளிப்பாட்டு முறை என்பவற்றுக்கு முதன்மை கொடுத்து கலைத்துவம் மிக்க படைப்புகள் வெளிவரத் தொடங்கின.6 இக்காலகட்டத்தில் எழுத ஆரம்பித்த உமா வரதராஜனின் ‘உள்மன யாத்திரை’ என்ற சிறுகதைத் தொகுப்பின் அறிமுக உரையில் எம்.ஏ. நுஃமான் குறிப்பிடும் பின்வரும் கருத்து இவ்விடத்தில் பொருத்தமானதாக இருக்கும்.

“ இக்கதைகளைப் பொறுத்தவரை இத்தகைய எதிர் கொள்ளல் மிகவும் இயல்பானதாகவும் கலைத்தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருந்த போதிலும் நமது பாரம்பரிய முற்போக்கு இலக்கிய விமர்சகர்கள் கலை இலக்கியத்தில் இத்தகைய மனோபாவத்தை தீவிரமாக எதிர்ப்பார்கள். இதைப் பிற்போக்குத் தனிமனிதக் கலை என்றும் சாடுவர். அவர்களைப் பொறுத்தவரை கதாபாத்திரம் ஏதோ ஒரு வகையில் கலகக்குரல் எழுப்ப வேண்டும். முரண்பாடுகளை மோதி உடைக்க வேண்டும். அப்போததான் அது முற்போக்கு இலக்கியமாகும். இக்கண்ணோட்டம், ஒரு படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகளை விட, படைப்பாளியின் மபோவத்ததை – அல்லது நோக்கு நிலையை மட்டும் முதனமைப்படுத்துவதன் விளைவாகவே ஏற்படுகின்றது. ஆனால் ஒரு நுண் உணர்வு மிக்க வாசகனைப் பொறுத்தவரை படைப்பாளியின் மனோபாவத்ததைவிட படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகள் அல்லது சமூக யதாரத்தம், அது ஏற்படுத்தும் கலைப் பாதிப்பு என்பனவே முக்கியமானதாகும்.”7

இப்பின்புலத்திலே இருந்து நோக்குகிற போது, எழுபதுகளின் பிற்பகதியில் இருந்து எழுத ஆரம்பித்த ஆனந்தமயில் சில வித்தியாசமான படைப்புகளைத் தந்திருக்கிறார். பல கதைகள் வழமையான கதை எழுதல் முறையிலே எழுதப்பட்ட போதும் கலை நேர்த்தியுடன் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய படைப்புகளைத் தந்த ஆனந்தமயில் ஈழத்துச் சிறுகதைப் பரப்பில் பலரது கவனத்தையும் பெறுவார் என்று சொல்லலாம். இவர் எழுபதுகளின் பிற்பகுயில் இருந்து வித்தியாசமான வெளிப்பாட்டு முறையில் பல சிறுகதைகளைத் தந்த படைப்பாளிகளோடு வைத்து நோக்கப்பட வேண்டியவர். இத்தகைய கலைத்தாக்கம் இவரது சிறுகதைகளில் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

அடிக்குறிப்புகள்
1. சண்முகம், குப்பிளான் ., (2006) நேர்காணல் - மூன்றாவது மனிதன்பதினேழாவது இதழ்). .15.
2. குணராசா,., (2001 ) ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாறு, யாழ்ப்பாணம்; வரதர் வெளியீடு.ப.194.
3. ஆனந்தமயில்,., (2008) ஓர் எழுதுவியைஞனின் டயறி, வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு. .25.
4. ஆனந்தமயில்,., (2008) ஓர் எழுதுவியைஞனின் டயறி, வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு. முருகையன்,., (முன்னுரை) .xiv.
5. இக்காலகட்டத்தில் முற்போக்கு வட்டத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும்சிலர் கலைத்துவமான படைப்புகபைத் தந்தனர் என்பதும் கவனிக்க வேண்டியது.
6. இக்காலகட்டத்தில்தான் சில முற்போக்கு விமர்சகர்களும் இலக்கியத்தில்அழகியல் முக்கியத்தவம் பற்றிப் பேசத் தொடங்கினர் என்பதும்கவனத்திற்குரியது.
7. வரதராஜன்,உமா, (1988) உள்மனயாத்திரை. நுஃமான்,எம்.., (முன்னுரை)

No comments: