
மனிதனின் நிகழ் கலைகள் அனைத்தையும் உழைப்புத் தன்மையோடு கவனிக்கத் தவறக்கூடாது. தன்மைகளே வகைப்பாடுகளுக்கும் வகையளிக்கின்றன.
-முனைவர் கே.ஏ. குணசேகரன்
கிராமிய நிகழ்த்து கலை வடிவங்களுக்கும் சடங்கியல் முறைமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் மக்களுடைய கிராமிய நிகழ்த்து கலை வடிவங்களான கரகம், கும்மி, காவடி போன்ற வடிவங்களும் இத்தகைய தன்மைகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. இன்று பெரும்பாலும் இவை சடங்கியல் முறைமை சார்ந்த வடிவங்களா, சடங்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு நிகழ்த்து கலை நோக்கிப் பயணிக்கின்ற இடைமாறுகட்ட வடிவங்களா, சடங்கிலிருந்து முற்றாக விடுபட்ட நிகழ்த்து கலை வடிவங்களா அல்லது ஒரேநேரத்தில் சடங்கு, நிகழ்த்துகலை என்ற இரண்டுக்குமான சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற வடிவங்களா என்று ஆராய்கின்ற முறைமையே காணப்படுகிறது. ஆனால், சடங்கியல் முறையின் தோற்றம், அதன் பற்றி ஆராய்வது குறைவு. இந்தப் பின்புலத்தில் பார்க்கிறபோது இன்று காவடி,
- முருகனுக்கு நேர்த்தி வைத்து, அது நிறைவேறிய பின் எடுக்கப்படுகின்ற சடங்கியல்சார் வடிவம்
- சடங்கியல் முறைமையிலிருந்து வளர்ச்சியுற்ற நிகழ்த்துகலை வடிவம்
I

காவடி என்ற சொல்லின் தோற்றமும் இதனடியாகவே தோற்றம் கண்டது. காவுதடி என்பது காவு(வினை), தடி(பெயர்) என்பவற்றின் கூட்டுப்பெயராகும். காவு என்பதற்கு மதுரைப்பேரகராதி ஓர் மந்திரிமை, சிறுதெய்வங்களுக்கு இடும்பலி, சுமஎன் ஏவல் என்ற பொருள்களைக் குறிப்பிடுகிறது. தடி என்பதற்கு க்ரியாவின்தற்காலத் தமிழ் அகராதி உருண்டையான கனமான கழி(தடி) என்ற பொருளைக் கூறுகிறது. கனமான தடி ஒன்றிலே காணிக்கைப் பொருட்களைக் காவிச்செல்வதன் காரணமாக இது காவுதடி என்று காரணப்பெயராக இடம்பெற்றிருக்கிறது. காவுதடி என்பதற்கு காத்தடி, காத்தண்டு, காக்கம்பு என்ற பொருளையும் காவடி என்பதற்கு கா, காவுதடி, காத்தடி, காமரம் என்ற பொருள்களையும் மதுரைப்பேரகராதி வழங்கியிருக்கிறது. இவற்றிலிருந்து பார்க்கிற போது காவடி என்ற சொல் காவுதடி என்ற சொல்லிருந்தே மருவி வந்திருக்க வேண்டும் என்று சொல்லலாம்.
இதனைவிட காவடியின் தோற்றம் பற்றிய புராணச் செய்தி ஒன்றும் காணப்படுகிறது. ஒருசமயம் சிவபெருமான் அகத்தியரை தென்னாட்டுக்கு அனுப்பிய போது, அவர் பூசை செய்வதற்காக இரண்டு குன்றுகளைக் கொடுத்தனுப்பினாராம்; ஒரு குன்றைத் தமது ஸ்தானத்திலும் மற்றையதைத் தம் பத்தினியாகிய உமாதேவியின் ஸ்தானத்திலும் வைத்துத் தொழும்படி கூறினாராம். அந்த இரு குன்றுகளையும் எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கி வரும்போது, ஒரு காட்டுப்பிரதேசத்தில் வைத்துவிட்டுத் தென்னாட்டுக்கு வந்துவிட்டார். மற்றொருமுறை அந்தக்குன்றுகளை எடுத்துவருவதற்காக வடக்கு நோக்கிப் புறப்பட்ட போது, அவரது மாணவர்களுள் ஒருவரான இடும்பன் "அவற்றை நான் எடுத்து வருகிறேன்” என்று கூற, அகத்தியர் அவனை அனுப்பிவைத்தார். வடக்கிலிருக்கும் அக்குன்றுகள் இரண்டையும் இடும்பன் தூக்க முயன்று முடியாமற் திகைத்து நின்றான். அப்போது பிரதண்டம் (பிரம்மனதுதடி) மலைகளின் மீது காட்சியளித்தது. பாம்புகள் பல வந்து, தமது உடலால் குன்றுகளையும் பிரதண்டத்தையும் சேர்த்துக் கட்டின. இவை காவடி போன்றுமாறின. அப்புறம் இடும்பன் குன்றுகள் இரண்டையும் இலகுவாகத் தூக்கிவந்தான். பழனிக் காட்டுக்கு வந்து குன்றுக்காவடியை இறக்கி வைத்துவிட்டுச் சிறிது இளைப்பாறினான். பின்னர் தூக்க முயன்று முடியாமற் போய்விட்டது. இதன் காரணம் புரியாமல் மலையின் உச்சியைப் பார்த்த போது, கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு கௌபீனதாரியாகக் காட்சியளிக்கும் ஓர் இளைஞனை -தண்டாயுதபாணியை- க் கண்டான்.
இளைஞன் “குன்றுகள் எனக்குரியவை” என உரிமை கொண்டாடினான். இடும்பனுக்குக் கோபம் வந்து அவனோடு சண்டையிட்டான். இறுதியில் இடும்பன் மூர்ச்சித்து விழுந்தான். தெளிந்து எழுந்த பிறகு நிற்கும் சிறுவன் சுப்பிரமணியக் கடவுளே என்பதை அறிந்து . “தான் குன்றுகளைக் காவடியாகத் தூக்கி வந்தததைப் போல, முருகன் சந்நிதிக்குக் காவடி தூக்கி வருபவர்களுக்கும் அருள் செய்து, அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் போக்க வேண்டும்” என்று வரமும் வேண்டினான். முருகன் அவ்வாறே வரம் கொடுத்தார். அன்று முதல் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.2 இப்புராணச் செய்தியின் உண்மைத் தன்மை என்ற நிலைகளுக்கு அப்பால், காவடி பற்றிய சில செய்திகளை அறிய முடிகிறது.
- காவடி முருகனோடு சம்பந்தப்படுத்தப்படல்.
- காவடியில் இடும்பனின் வருகை. அதாவது, காவடி ஆடிச்செல்லும் போது இடும்பன்சாமி கூடவே ஆடிச் செல்கின்ற வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அதே போன்று பல முருகன் ஆலயங்களில் இடும்பன் பரிவாரத் தெய்வமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளமையைக் காண்கிறோம். இத்தகைய முறைமைக்கு இது வித்திட்டிருக்கலாம்.
- காவடி தடி ஒன்றின் மேலே மலை போன்ற வடிவில் கட்டப்படுவதற்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம்.
இந்தப் பின்புலத்தில் பார்க்கிற போது, காவுதடியின் எச்சங்களை இன்றும் தமிழ்நாட்டில் காணமுடிகிறது. இதனைவிட ஆரம்பத்தில் சேவல், அன்னம், மச்சம்(மீன்) என்பவற்றைக் குடத்தில் இட்டு காவடி எடுக்கின்ற வழக்கம் இருந்தது. “முன்னர் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு பக்தர்கள் பொரித்த மீன்களைச் சட்டியிலிட்டுக் காவடி எடுப்பதாகவும் கோவில் அருகிலுள்ள தொண்டைமானாற்றினருகாகச் செல்லும் போது, சட்டியிலுள்ள பொரித்த மீன்கள் உயிர் பெற்று ஆற்றில் விழுவதாகவும் ஐதிகம் உண்டு.”4 இத்தகைய முறையில்; மேன்நிலையாக்கம் காரணமாக பின்னாளில் மாமிசம் ஒதுக்கப்பட்டு, பண்டாரங்கள் ஊர் ஊராகச் சென்று அன்னப்பிச்சை எடுக்கின்ற அன்னக்காவடி முறையே பலகாலம் நீண்டது. இச்செய்தியை பாரதியின்
“எண்ணும் முன்னே ‘அன்னக் காவடிப் பிச்சை’ என்
றேங்கிடுவான் குரலும்”5
றேங்கிடுவான் குரலும்”5
என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன. இதன்பின்னர் பாற்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, முள்ளுக்காவடி, துலாக்காவடி என்று காவடியின் வகைகள்நீண்டு செல்கின்றன. எனவே, காவடியானது காவுதடி முறை என்ற உழைப்பினடியாகவே பிறந்தது என்று கூறுவதே பொருந்தும். பின்னாட்களிலேயே புராணச் செய்திகள் உள்நுழைந்து கொண்டன.
II

பெரும்பாலும் இன்று காவடியினைச் செய்வோர்களாகப் ‘பண்டாரம்’ என்ற சமூகக் குழுமமே குறிப்பிடப்படுகிறனர். இவர்கள் ஆரம்பத்தில் சத்திரம், மடம் என்பவற்றில் வாழுகின்ற பண்டாரங்களுக்காக ஊர் ஊராகச் சென்று 'அன்னக்காவடி தர்மம் தாயே’ என்று அன்னக்காவடி எடுப்பவர்களாகவே இருந்தார்கள். பின்னர் ஜீவனோபாயத்தை ஓட்டுவதற்காக சிலர் நினைத்த போதெல்லாம் காவடி எடுக்கத் தொடங்கினர். அதனாலேயே ஒன்றும் இல்லாதோரை ‘அன்னக்காவடி’ அல்லது ‘வெறுங்காவடி’ என்று அழைப்பதனை இன்றும் காண்கிறோம்.6 இத்தகைய சமூகப்பின்புலத் தாக்கம், சமூகமாற்றம் காரணமாக இவர்கள் தம்மைச் சமூக மேன்நிலையாக்கம் செய்கின்ற போது, அன்னக்காவடி முறையினைக் கைவிட்டு காவடியைச் செய்கின்ற தொழில் முறையைக் கையேற்றிருக்க வேண்டும்.
இவர்கள் காவடியைச் செய்கின்ற போது அதனை அழகுபடுத்த பட்டுத்துணி, மயிலிறகு என்பவற்றையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதற்குஅதிகமாக மயிலிறகினைப் பயன்படுத்துவதற்கான காரணம் பற்றிச் சிந்திக்கிறபோது,
- இயல்பாக மயிலிறகு மீதான அழகுணர்ச்சி
- குன்றுகளில் வாழும் முருகனுக்கு காவடி எடுக்கப்படுகிறது. மயில்மலையும் மலைசார்ந்த இடத்தில் அதிகமாக வாழ்வதால், அதனைஅங்கிருந்து இலகுவிற் பெறமுடியுமாக இருத்தல்
- முருகனின் வாகனமாக மயில் இருத்தல்
காவடிக்கலையில் பாடலும் முக்கியத்துவம் பெறுவதைக் காணமுடியும். பாடல்கள் நாட்டார் மெட்டில் அமைந்தவையாகவே காணப்படுகின்றன. காவடி உழைப்பினடியாகப் பிறந்தது போன்று பாடல் மரபும் உழைப்பினடியாகவே பிறந்திருக்கிறது. “முருக பக்தர்கள் யாத்திரை செல்லும் போது, பல்வேறு மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். அவர்கள் தனித் தனியாகச் செல்வதில்லை. காவுதடியில் பொருட்களையும் தமது ஒரு சில பாவனைப் பொருட்களையும் கட்டிக் கொண்டு செல்வர். வழிப்பயணம் தோன்றாமல் இருப்பதற்காக பாடிச்செல்வர். அவையே பின்னர் பல்வேறு பட்ட ராகவேறுபாடுகளுடன் கூடிய காவடிச் சிந்தாகும்.”7 காவடிச்சிந்து அதனைத் தொடர்ந்து வந்த பல்வேறு சிந்துகளிலும் இத்தன்மையைக் காணலாம். காவடிச்சிந்திலே வருகின்ற பின்வரும் பாடல் மூலம் இதனை அறியலாம்.
"ஆறுமுக வடிவேலவனே! கலி
யாணமும் செய்யவில்லை; சற்றும்
அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்
கழைக்கிறாய், என்ன தொல்லை?
மீறிய காமம்இல் லாதபெண் ணோடே
விளம்பாதே வீண்பேச்சு – சும்மா
வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில்
வெட்கம் எங்கே போச்சு "8
என்று தலைவியின் ஊடலாக அமைகின்ற இப்பாடல், கேள்வி பதில் முறையிலே அமைந்த நாட்டுப்புறப் பாடல்களைப் போன்று அமைந்திருப்பதைக் காணலாம். காவடி எடுக்கும் போது பாடல்களை காவடி எடுப்பவரோடு செல்கின்றவர்களே பாடிச்சென்றனர். பின்னர் இவற்றை இசைத்துச் செல்லுகின்ற தொழில்முறைசார் சமூகக் குழுமம் உருப் பெற்றது.
இதில் இசையும் பிரதானமானது. இசைக்கருவிகளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றமுற்றே வந்திருக்கின்றன. முதலில் வாயாலே பாடிச்சென்ற இவர்கள் பின்னரே இசைக் கருவிகளைச் சேர்த்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் தோற்கருவிகளான உடுக்கு போன்ற கருவிகளே பயன்படுத்தப்பட்டு, பின்னர் பறை, மேளம், மேளத்தை ஒத்த தோற்கருவி என்பன பயன்படுத்தப்பட்டன. இன்று இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ அல்லது அனைத்தையுமோ இசைத்தவாறு காவடியை ஆடிச்செல்வர். இன்று இதற்கும் தொழில்முறைசார் தனிக்குழுமங்கள் காணப்படுகின்றன.
பாடல், இசை போன்று ஆடல் முறைமையும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டுப்புறக் கலைகளின் ஆடல் முறைகள் பெரும்பாலும் ஒத்தவையாகவே இருக்கும். கரகம், கும்மி, கோலாட்டம், காவடி என்பவற்றின் ஆடல்களில் காலை எடுத்து வைத்து ஆடுகின்ற முறைமைகளில் ஒற்றுமை உண்டு. காவடியின் மாற்றீடாக ஓரளவு கரகத்தைக் கொள்ள முடியும். ஆனால் காவடியில் செய்கின்ற சில விளையாட்டுகளை நாம் கரகத்திலே செய்ய முடியாது. உதாரணமாக, காவடியைத் தோளின்மேல் வைத்துக் கைகளைப் பிடிக்காமல்உடலை அசைப்பதன் மூலம் தோளிலிருந்து முதுகுக்கும் முதுகிலிருந்துதோளுக்குமாக மாற்றி மாற்றி ஆடுவார்கள். இதனைக் கரகத்தில் செய்யமுடியாது. ஆனால், கையைப்பிடிக்காமல் கரகம் ஆடுகின்ற முறைமை உள்ளது. “அவற்றுள் ஆட்டக்காவடியும் தாளக்காவடியும் நடனங்களை அடிப்படையாகக்கொண்டவை. கூத்துக்காவடி, தாளக்காவடி என்றும் அழைக்கப்படுகிறது. தாளக்கட்டுகளை அடிப்படையாக வைத்து ஆடுவதால் இது இப்பெயர் பெற்றிருக்கலாம். காவடியின் ஆட்டங்கள் காவடிச்சிந்து, மாரியம்மன் தாலாட்டு, காத்தவராயன் பாடல்களின் இசைக்கு ஏற்ப ஆடப்படும். உடுக்கு, பறை, மேளம்என்பன இவற்றின் பின்னணி வாத்தியங்களாகும். தாளக்காவடி நுட்பமான ஆட்டமுறைகளை உடையது.”9 இதனைப் பழக்குவதற்கு பெரும்பாலும் ஓர் அண்ணாவியார் இருப்பார். இது பெரிதும் தொழில்முறைசார்ந்தேகாணப்படுகிறது. இதனை நிகழ்த்த தனித்த சமூகக் குழுமங்கள்காணப்படுகின்றன.

III
இன்று காவடியானது சமயச் சடங்கில் இருந்து விடுபட்டு படச்சட்ட மேடை, சினிமா போன்றவற்றில் ஆடப்படுகின்ற ஒரு ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட கலைவடிவமாகவும் இருக்கின்றது. “விளம்பர யுகமாவும், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தும் உலகமாகவும் விளங்குகின்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதநேயத் தேடலுடன் உலகப் பார்வை, சங்கிலிப் பார்வை கொண்டவர்களாக வாழ்ந்தாகவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மண்ணின் மரபுகள் காலங் காலமாகக் கடைப்பிடித்துவரும் பாங்கு உலகெங்கும் வாழும் மக்களிடையே காணமுடிகிறது. பழமையிலிருந்தே புதுமை வார்த்தெடுக்கப்படுகிறது என்பதே இதன்அடிப்படையாக உள்ளது.”10 இந்த அடிப்படையிலே நோக்குகிறபோது, இன்று தமிழ்க் கலைகளைப் பதிவுசெய்தும் வளர்த்தும் செல்ல வேண்டிய நமது இலத்திரனியல் அவற்றை உருக்குலைத்தும் கேலிக்குரியதாகவும் மாற்றி உள்ளன என்றே சொல்ல வேண்டும்.சடங்கிலிருந்து முற்றாக இது விடுபடும் போது, அது தன் புனிதத் தன்மையினை இழந்துவிடுகின்றது. ஆறு. இராமநாதன் என்பவர் அம்மன் கரகம், ஆட்டக்கரகம்என்பவற்றை வேறுபடுத்துவது இதற்கும் பொருந்தும்.11 இதனைப் பின்வருமாறு பொருத்திப்பார்க்கலாம். (இதில் சில விடங்கள் இக் கட்டுரை ஆசிரியரால் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.)
சடங்கியல் சார் வடிவம் / நிகழ்த்து கலை வடிவம்
1. வழிபாட்டுச் சடங்கின் பிரிக்க முடியாத அம்சம் / வழிபாட்டுக் காலங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் நடைபெறும்
2. நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. / பொழுது போக்கை அடிப்படையாகக் கொண்டது.
3. வழிபடும் குழுவிலுள்ள ஒருவரே காவடியைத் தூக்கமுடியும். / கலைக் குழுவைச் சேர்ந்த எவரும் காவடியைத் தூக்க முடியும்.
4. பயிற்சி எதுவும் தேவையில்லை / பயிற்சி தேவை
5. காவடி தூக்கு முன் விரதம் மேற்கொள்வர் / விரதம் எதுவும் தேவையில்லை
6. ஆண்கள் மட்டுமே காவடி தூக்க அனுமதி உண்டு / ஆண் வேடமிட்டு பெண்களும் காவடி தூக்குவர்.
7. பெரும்பாலும் ஒருவர் / பெரும்பாலும் குழுவினர்
8. வழிபாட்டோடு தொடர்புடைய ஒப்பனைகள் / பார்வையாளர்களை வசீகரிக்கும் ஒப்பனைகள்
9. காவடி கீழே விழாமல் இருக்கத் தெய்வ சக்தியே காரணம் என நம்பப்படும் / காவடி கீழே விழாமல் இருக்க பயிற்சியும் திறமையும் காரணம் என நம்பப்படும்
10. காவடி எடுப்பவர்கள் தெய்வ சக்தி உடையவராக வழிபடப்படுவர் / காவடியாடுபவர்கள் சாதாரணமாக கருதப்படுவர்.
11. கோயில் வீதி, ஊர் வீதி என்பன ஆடுகளம் ஆகும் (நகரும் அரங்கு) / ஊரில் உள்ள வட்டமான மேடை, படச்சட்ட மேடை
12. பின்தொடர்வோர், சொந்தக்காரர் பார்வையாளர்களாக இருப்பர் / ஆடுகளத்திற்கு ஏற்ப பார்வையாளர்கள் வேறுபடுவர்
13. சாமி வந்து ஆடுவது தவிர பார்வையாளர்களைக் கவர ஆடுவதில்லை. / இசைக்கேற்ப பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் ஆடுவார்கள்
14. மரபு வழியைப் பின்பற்றுவதில் கவனமாக இருப்பர் / மரபு வழி ஆட்ட முறைகுறைந்து பாலுணர்வைத் தூண்டும் ஆட்டம் முனைப்புப் பெறும்
15. இடையே காவடி இறக்கப்படுவதில்லை / ஆட்ட நேரம் தவிர்ந்த நேரங்களில்காவடி இறக்கப்படும்
16. காவடி தவறி விழுந்தால் சாமி குற்றமாக கருதப்படும். / காவடி தவறிவீழ்ந்தால் திறமையற்றவராக கருதப்படுவர்
17. சடங்கு தொடங்குவது முதல் முடியும் வரை காலம் நீடிக்கும். / ஆடப்படும்இடத்திற்கேற்ப நேரம் வேறுபடும்
18. கூலி எதுவும் பெறுவதில்லை. / அதையே தொழிலாகச் செய்பவருக்கு கூலிஅவசியம்.
19. அலகு, முள்ளு என்பன குத்தி எடுக்கப்படும். / அத்தகைய முறைமை இல்லை.
20. பக்திப் பாடல்கள் மட்டுமே இங்கு இசைக்கப்படும். / சில வேளை சினிமாபாடல்களுக்கும் காவடி ஆடப்படும்.
IV
இத்தகைய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, இதனை எந்த வகைமைக்குள் அடக்குவது என்ற பிரச்சினை எழுவது தவிர்க்க முடியாது. சடங்கிலிருந்து நாடகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகின்ற சி. மௌனகுரு12 அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.i. நாடகம் சார்ந்த சமயக்கரணங்கள்
ii. சமயக்கரணங்கள் சார்ந்த நாடகங்கள்
iii. சமயக்கரணம் சாராத நாடகங்கள்
இங்கு நேர்த்திக்கடனுக்காக எடுக்கின்ற காவடியில் கோயில்வீதி, ஊர்வீதி என்பவற்றை நகரும் அரங்காகக் கொண்டு, நிகழ்த்துவோர், பார்வையாளர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் பங்குபற்றுவோராக இருந்து காவடி எடுப்பார்கள். இது புனிதத்தன்மை கொண்டதாக இருக்கும். வன்பக்தி, மென்பக்தி என்ற இருநிலைகளில் எடுக்கப்படும். அலகு, முள்ளு என்பன குத்தி எடுப்பதை வன்பக்திநிலைக்கும், சாதாரணமாக எடுக்கப்படுவதை மென்பக்தி நிலைக்கும் உதாரணங்களாகக் கூறலாம். இத்தகைய காவடியை ஒருவகையில் சடங்கியல்சார் நிகழத்துகலைவடிவம் என்ற வகைக்குள் அடக்கலாம்.
அதேவேளை படச்சட்டமேடை, சினிமா என்பவற்றில் நிகழ்த்தப்படும் காவடியில் நிகழ்த்துவோர், பார்வையாளர் என்ற நிலை ஏற்பட்டு, முற்றுமுழுதாக சடங்கில் இருந்து விடுபட்ட நிகழ்த்து கலை வடிவமாக இருக்கும். இதில் புனிதத்தன்மை அற்றுப்போய் தாளக்கட்டே முக்கியம் பெறுகிறது. இதற்கேற்ப பாடல், இசை என்பன இருக்கும்.
கலை என்பது ஒற்றைப்படையானது அல்ல. அது எல்லாக்காலத்திலும் ஒரேவடிவத்தைக் கொண்டிருப்பதுமில்லை. அப்படி இருப்பதும் சாத்தியமில்லை. அது காலமாறுதல்களுக்கு ஏற்ப மண்ணின் வாசனையோடு தன்னைமாற்றிக்கொண்டே இருக்கும். இந்தப் பின்புலத்தைக் கொண்டு காவடி பற்றிச்சிந்திக்கிற போது, அது இன்று சடங்கியல்சார் வடிவம், நிகழ்த்துகலை வடிவம்என்ற இரண்டுக்குமான சாத்தியங்கனையும் கொண்டு விளங்குவதைக்காணமுடிகிறது. எனவே இன்றைய நிலையில் “உழைப்பினடியாககப் பிறந்து, ஒரே நேரத்தில் சமயக்கரணமாகவும் நிகழ்த்துகலையாகவும் இருக்கின்றகிராமியக்கலை வடிவங்களுள் ஒன்றாக” நாம் காவடிக்கலையினைஅடையாளப்படுத்தலாம்.
அடிக்குறிப்புகள்
1. நேர்காணல்: இக்கட்டுரை பற்றி கலாநிதி வ.மகேஸ்வரன்அவர்களுடன்உரையாடிய போது இத்தகைய முறைமை இன்றும் பழனி, திருவண்ணாமலைபோன்ற ஆலயங்களில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
2. அழகிரிசாமி,கு., (பதிப்பு) (2004) அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து, சென்னை: வ.உ.சி நூலகம். அழகிரிசாமி,கு., (முன்னுரை) ப. 13-14.
3. ஜெயராசா,சபா., (2008) “சமூக முரண்பாடும் நாடக அரங்கும் ஆற்றுகையும் - ஒரு மீள் வாசிப்பு”, ஓலை (ஆடி – ஆவணி, 2008), கொழும்பு: கொழும்புத்தமிழ்ச்சங்கம். ப.4.
4. சுந்தரம்பிள்ளை,காரை,. (2000) வடஇலங்கை நாட்டார் அரங்கு, சென்னை: குமரன் புத்தக இல்லம். ப. 36.
5. அழகிரிசாமி,கு., மேலது. ப. 11.
6. மேலது. ப. 11.
7. சுந்தரம்பிள்ளை,காரை,. மேலது. ப. 35-36.
8. அழகிரிசாமி,கு., (பதிப்பு) (2004) அண்ணாமலை ரெட்டியர் பாடிய காவடிச்சிந்து, சென்னை: வ.உ.சி நூலகம். ப. 57.
9. மௌனகுரு,சி., (2007) ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு, சென்னை: குமரன்புத்தகஇல்லம். ப. 25.
10. குணசேகரன்,கே.ஏ., (1993) நாட்டுப்புற நிகழ்கலைகள், சென்னை: நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட். ப. 33.
11. இராமநாதன்,ஆறு., (1997) நாட்டுப்புறவியல் ஆய்வுகள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம். ப. 246-247.
12. மௌனகுரு,சி., மேலது. ப. 7
நக்கீரம் (2009,சட்டக் கல்லூரி)
4 comments:
hi anna your artical is very intersting
மிகவும் ஆழமான ஆய்வுக் கட்டுரை. சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
எனது இன்றைய பதிவான "காவடியாட்டம்- பலன்கள், பாதகங்கள், நம்பிக்கைகள்" ல் உங்கள் படைப்புக்குத் தொடுப்பு கொடுத்துள்ளேன்.
http://suvaithacinema.blogspot.com/2010/12/blog-post_31.html
Thanks
Thanks
Post a Comment